படித்தவரை போல் கருத்துரையுங்கள் -பாராளுமன்றத்தில் நீதியமைச்சரை நோக்கி சிறிதரன் கடும் ஆவேசம்

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடையவுள்ள போதும் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளவில்லை. முட்டாள் போல் பேசாமல், படித்தவரை போல் கருத்துரையுங்கள்  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நீதியமைச்சர் விஜயதாஸவை நோக்கி காட்டமாக  பதில் அளித்துள்ளார்.

மேலும் தலைவர்  பிரபாகரனை நாங்கள் எப்போதும் மறக்க போவதில்லை. அவரே எங்கள் தலைவர். அவர் கண்ணியமானவர் என்பதால் தான் இன்றும் பெரும்பான்மையினர் அவரை மறக்காமல் உள்ளார்கள் என்றும் நேற்று இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் கட்டளை மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில்  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் கருத்தை தொடர்ந்து தேர்தல் இடம்பெறாது என்பதை விளங்கிக் கொள்ளமுடிகிறது.

இந்த நாடு எதனை நோக்கிச் செல்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது. ஜனநாயகத்திற்கு முரணாக சர்வாதிகாரத்திற்கான வித்திடல் செயற்பாடுகள் மாத்திரம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

காட்டில் வாழும் உயிரினங்களில் நரி தந்திரமானது அதே போல் இந்த நாட்டின் அரச தலைவரும் நரியை போல் தந்திரமானவர் என்பது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டதாக அமையவில்லை.பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை முன்வைக்காமல் ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படும் வகையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவது நாட்டில் மோசமான நிலைமையை தோற்றுவிக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் நாட்டை பாரிய நெருக்கடிக்கு கொண்டு செல்லும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றியதை தொடர்ந்து பாராளுமன்றம் கோமாளிகளின் கூடாரமாக மாற்றமடைந்து விடுகிறது. ஜனநாயகத்திற்கு அமைய நாட்டை நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது.

நாட்டின் விவசாயம் முழுமையாக வீழ்ச்சிடைந்துள்ளது. நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

எரிபொருள் விலையேற்றத்தினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயத்துறையை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கிளிநொசசி மாவட்ட விவசாய சங்கத்தினர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்கள்.விவசாயத்துறை வீழச்சியால் தாம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சிறந்த தீர்வை பெற்றுக் கொடுப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்கள். நெல்லுக்கான உத்திரவாத விலையை நிர்ணயிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, மக்கள் வாழ முடியாத நிலை காணப்படுகிறது. தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற சந்தேகம் காணப்படுகிறது. அரச தலைவர் கீழ்தரமாக பேசுகிறார்,நாடு எதனை நோக்கி செல்கிறது,பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை,அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண இனங்களுக்கிடையில் முதலில் நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ வடக்கு மக்கள் வாழ்க்கையுடன் விவசாயததுறை ஒன்றிணைந்ததாக காணப்பட்டது.வடக்கு மாகாண விவாசயத்தை அரசாங்கம் இல்லாதொழிக்கவில்லை.பிரபாகரனினால் வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையும், மக்களின் வாழ்க்கையும் இல்லாதொழிக்கப்பட்டது.

பிரபாகரனிக் நிர்வாகத்தினால் தான் வடக்கு மக்களின் வாழ்க்கை இல்லாதொழிக்கப்பட்டது.உண்மையை மறைத்து கடந்த இரு வருட காலத்தில் தான் வடக்கு மாகாண விவசாயம் இல்லாதொழிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,பொறுப்பானவர் என்ற வகையில் உண்மையாக  செயற்படுங்கள் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பி உரையாற்றிய எஸ்.ஸ்ரீதரன். நீங்கள் தற்போதும் பிரபாகரனை மறக்கவில்லை, நாங்களும் மறக்க போவதில்லை.வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டோம் எங்கள் தலைவர் பிரபாகரன்தான்,அவர் நேர்மையான கன்னியமான தலைவர் என்பதால் நீங்களும் மறக்க போவதில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு க்கு விஜயம் மேற்கொண்டு நெல்லுக்கான உத்தரவாத விலையை 100 ரூபாவாக  நிர்ணயிப்பதாக குறிப்பிட்டார்,ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை,ஆகவே இவ்விடயத்தில் பொய்யான விடயங்களை குறிப்பிட வேண்டாம்.யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் பிரபாகரனை விமர்சிக்காதீர்கள், படித்தவர்கள், போல் உரையாற்றுங்கள் முட்டாள் போல் கதைக்க வேண்டாம் என நீதியமைச்சர் விஜயதாஸவை நோக்கி குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ   நான் இனவாதம் பேசவில்லை, இவர்கள் தான் இனவாதம் பேசுகிறார்கள்.வடக்கிற்கு சென்று நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம்.நல்லிணக்கத்திற்கு வடக்கு மக்கள் முழு ஆதரவு வழங்குகிறார்கள். இனவாத அரசியல்வாதிகள் தான் தடையாக செயற்படுகிறார்கள் என்றார்.