இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடு, நாட்டின் கடன் வாங்கும் செலவுகளைக் குறைத்து, நிதிச் சந்தைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ள போதிலும், நிலைமை முழுமையாகச் சீரடையவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
‘இலங்கையின் அரச கடன் மறுசீரமைப்பு – சிக்கலான செயல்முறைகளில் இருந்து பாடங்கள்’ என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையில், சர்வதேச நாணய நிதியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மறுசீரமைப்பிற்குப் பிந்தைய இலங்கையின் கடன் தொகுப்பு மிகவும் சிக்கலானது என்றும், இதற்கு வலுவான அரச கடன் முகாமைத்துவம் மற்றும் தொடர்ச்சியான நிதி ஒழுக்கம் தேவை என்றும் அந்தக் கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடன் பத்திரப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து, உள்நாட்டு நிதி நிலைமைகள் பெரும்பாலும் சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளன. திறைசேரி உண்டியல் வட்டி வீதங்கள் மார்ச் மாதத்திற்குள் சுமார் 8.5% ஆகக் குறைந்துள்ளன.
இது மறு நிதியளிப்பு அபாயங்களைக் குறைப்பதற்கு அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டெம்பரில் மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உடனடி அழுத்தங்களைப் போக்க உதவியுள்ளன. இதனால் தனியார் கடன் வளர்ச்சி மீண்டும் தொடங்கவும், தற்போதைய பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும் முடிந்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், கடன் மறுசீரமைப்பு மட்டுமே கடன் நிலைத்தன்மையை உறுதி செய்யாது என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
தொடர்ச்சியான விவேகமான நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளும், வலுவான நிறுவனங்களும் அத்தியாவசியமானவை.
நிதித்துறையில் எந்தச் சறுக்கல்களும் இருக்கமுடியாது என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னர் செலவு மற்றும் அபாய பகுப்பாய்வு அவசியம் என்றும், புதிய கடன் திட்டங்கள் நாட்டின் இலக்குகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வரி வீதங்கள், பிழையான கொள்கைத் தவறுகள் மற்றும் வெளிச்சந்தையில் கடன் பத்திரம் வெளியிட்டமை போன்ற காரணிகளின் கலவையால் தான் இலங்கையில் கடன் நெருக்கடி ஏற்பட்டது என்றும் அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.
நிதி நிலைத்தன்மையை பாதுகாக்க தொடர்ச்சியான விழிப்புணர்வு தேவை என்றும், அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொதுக் கடன் முகாமைத்துவம் சட்டங்களை இயற்றியமை அதிகாரிகளை விவேகமான முடிவுகளை நோக்கி நகர்த்துவதற்கான முக்கிய மைல்கற்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கையின் அனுபவம், சிக்கலான கடன் வழங்கல்களை கையாளும் மற்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு படிப்பினைகளை வழங்குகிறது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.