அதானியின் காற்றாலைத் திட்டம் மீளாய்வு செய்யப்படும் : புதிய அரசாங்கம்

இந்திய அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சக்தி ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசாங்கம்  கூறியுள்ளது.

இது வெளிநாடுகளில், தமது திட்டங்களை விரிவாக்க முயலும் இந்திய அதானி கூட்டுக்கு புதிய தடையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் திட்டங்களில், முந்தைய அரசாங்கம் வழங்கிய மின்சார விலை ஒப்புதல் ஒரு பிரச்சினையாக உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், புதிய அரசாங்கம் இந்த ஒப்பந்தத்திற்கு புதிய தோற்றத்தை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பிரச்சாரங்களின் போதும் கற்றாலை மின் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

இத் திட்டத்தை இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அநுரா கூறியதுடன் அதனை இரத்து செய்வதாகவும் உறுதியளித்திருந்தார்.

ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையுடைய அதானி குழுமம் இலங்கைத் தீவில் பல உட்கட்டமைப்பு திட்டங்களை நிறுவ எதிர்பார்க்கும் நிலையில், கற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்திற்கான இத் தடை கெளதம் அதானியின் இலட்சியங்களுக்கு சவாலாக அமையும் என அவதானிகள் கருதுகின்றனர்.