சீனா புதிய நீண்டகால வளர்ச்சிக்கான பாதை வரைபடத்தை முன்வைத்துள்ள நிலையில் அதில் குறிப்பிடப்படும் 15ஆவது சீனாவின் ஐந்தாண்டுத் திட்டத்துடன் இலங்கையின் தேசிய முயற்சிகள் ஒத்துப்போகின்றன என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய குழுவினுடைய நான்காவது முழு அமரவு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பீஜிங்கில் நடைபெற்றிருந்தது. அந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ‘சீனாவின் புதிய வளர்ச்சி உலகிற்கு புதிய வாய்ப்பு’ எனும் தலைப்பிலான முடிவுகள் குறித்த விளக்கக்காட்சிகளை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வ கொழும்பு ஷங்கிரில்லா ஹொட்டலில் நடைபெற்றது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்த நிகழ்வில் உரையாற்றும்போதே சீனத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் குழுவின் நான்காவது முழுமையான அமர்வு, வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த அமர்வில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சீனா, 1953ஆம் ஆண்டில் முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் ஆரம்பித்ததிலிருந்து ஐந்தாண்டுத் திட்டங்களை விஞ்ஞானரீதியாக ஆராய்ந்து செயற்படுத்துகிறது. குறிப்பாக சோசலிசத்தின் முக்கிய அரசியல் பலமாக விளங்குவதை நோக்கமாக கொண்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த ஐந்தாண்டு திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.
இதனால் சீனா ஏழ்மை நிலையிலிருந்து அனைத்து வகையிலும் மிதமான செழிப்பு கொண்ட சமூகமாக உருவெடுத்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல நாடுகள் ஐந்தாண்டுத் திட்டங்களைக் கைவிட்ட நிலையில், சீனா மட்டும் தனது கட்டமைப்பைச் செம்மைப்படுத்தி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வளர்ச்சியை அடைந்து முன்மாதிரியாகத் திகழ்கிறது



