இலங்கையின் பொருளாதாரம் 2026ல் இயல்பான வளர்ச்சிக்குத் திரும்பும்!

இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டளவில் 3.1% என்ற அதன் இயல்பான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் துணை பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லிங் (Thomas helbling) அறிக்கையொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2022 – 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை சந்தித்த கடுமையான பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மிக வேகமாக இலங்கை மீண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நீடிக்கப்பட்ட நிதி வசதி மற்றும் நாட்டின் சில மறுசீரமைப்பு காரணமாக, கடந்த ஆண்டு பொருளாதாரம் 5% வரையிலும், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 4.8% வரையிலும் வேகமாக வளர்ச்சி அடைந்தது.

இது ஒரு நல்ல மீட்சியாக பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அந்த வேகமான மீட்சி முடிவடைந்து, நாட்டின் பொருளாதாரம் இனி ஆண்டுக்குச் சராசரியாக 3.1% என்ற அளவில் சாதாரண வேகத்தில் வளர்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இந்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து மேற்கொண்ட ஆய்வில் அரசாங்கம் செய்துள்ள பொருளாதார மறுசீரமைப்பு திருப்திகரமாக இருப்பதாகக் கூறி, அடுத்த கட்ட நிதியுதவிக்கான ஒப்புதலை அளித்துள்ளனர்.