இலங்கை பொருளாதார நெருக்கடி: தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜப்பான் அமைச்சர் தெரிவிப்பு

இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டியில் ஜப்பானின் சர்வதேச விவகாரங்களிற்கான துணை அமைச்சர் மசட்டோ கண்டா இதனை தெரிவித்துள்ளார்.

70வருடகாலத்தில் இல்லாத மோசமான  பொருளாதாரநெருக்கடி காரணமாக துன்பத்தில் சிக்குண்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்காக ஜப்பான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனாவும் இந்தியாவும் பங்கெடுப்பதை உறுதி செய்வதற்காக பாரிஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன்  இணைந்து ஜப்பான் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்டின் பின்னர் தங்கள் கடன்களை செலுத்த முடியாத நிலையில் உள்ள நாடுகளின் துரித கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்காக ஜி20 பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் பாரிஸ் கழகத்தில் இடம்பெறாத இந்த நாடுகளுடன் இதேபோன்று பொதுவான கட்டமைப்பின் கீழ் பணியாற்றுவது விரும்பத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

இது சாத்தியமானால் நடுத்தரவருமான நாடுகளின் கடன்மறுசீரமைப்பு சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். கடனில் சிக்குண்டுள்ள நாடுகளிற்கு உதவுவது என்ற விடயம் என வரும்போது  இலங்கைக்கு முக்கியமான விடயம் என தெரிவித்துள்ள ஜப்பான் அமைச்சர் ஆனால் இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் எப்போது கடன்நீட்டிப்பில் ஈடுபடப்போகின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.