பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் 22 வீதமான குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஜூலை 29ஆம் திகதி வெளியிடப்பட்ட கணக்காய்வு அறிக்கையில், அதிகக் கடன்தொகை வீதம் அடமானங்கள் மூலம் பதிவாகியுள்ளதுடன், 31 வீதமான கடன்கள் அடமானங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளன.
இந்நாட்டில் 22.3 வீதமான குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே கடன்களை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து 21.9 வீதமும், சமுர்த்தி போன்ற கிராம வங்கிகளிலிருந்து 7.1 வீதமும் , பணம் கடன் வழங்குபவர்களிடமிருந்து 9.7 வீதமும், நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களிலிருந்து 8.7 வீதமும் கடன் பெறப்பட்டுள்ளது.
இதேவேளை, பொருளாதார நடவடிக்கைகளுக்காக 15.7 வீதமும், வீடு கட்டுதல் மற்றும் வீடு பழுதுபார்ப்பதற்காக 17 வீதமும், சுகாதாரத் தேவைகளுக்காக 9.9 வீதமும், முந்தைய கடன்களைத் தீர்ப்பதற்காக 11.9 வீதமும் கடன் பெறப்பட்டுள்ளது.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அத்தியாவசியச் செலவுகளை ஈடுகட்ட வீட்டுப் பிரிவுகள் அதிகமாகக் கடன் வாங்குகின்றன.
கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை, கடனைச் சார்ந்திருப்பது போன்ற காரணங்களால் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சவால்கள் எழுந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.