இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் 05 பேரும் தமது உணவுத் தவிர்ப்பை நிறைவு செய்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கப்பட்ட நிலையில் நேற்று (06) மாலை தமது உணவுத் தவிர்ப்பை நிறைவு செய்து கொண்டதாக சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
திருச்சி சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட இலங்கையர்களின் கோரிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள வெளிவிவகார அமைச்சரும் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த 04 பேருக்கும் தற்காலிக போக்குவரத்து அனுமதியை வழங்குவதற்கான பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, உரிய காலப்பகுதிக்குள் குறித்த நான்கு பேரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னையிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. உரிய சட்ட ஆவணங்கள் இல்லாததன் காரணமாக, கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 06ஆம் திகதி, குறித்த நான்கு இலங்கையர்களும் திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்கள் தொடர்பில் கியூ பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், எந்தவித குற்றச் செயல்களும் பதிவாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது தொடர்பில் எவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் இலங்கைக்கான துணை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த நான்கு பேருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மற்றுமொரு இலங்கை பிரஜையை, நாமக்கல் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



