இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையிலான எட்டு மாதங்களில் இலங்கை வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி ஒகஸ்ட் 2025க்கான அதன் வெளிநாட்டுத்துறைச் செயல்திறன் அறிக்கையில் இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்கான அதிகபட்ச மாதாந்த செலவினமாக ஓகஸ்ட் 2025 பதிவாகியுள்ளது.
அதன்படி 255.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது ஜூலையில் செலவிடப்பட்ட முந்தைய அதிகபட்சமான 206 மில்லியன் அமெரிக்க டொலரை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
இதேவேளை, SVAT என்ற எளிமைப்படுத்தப்பட்ட VAT வரி முறை இன்று (01) முதல் இரத்து செய்யப்படுகிறது. இந்தமுறை இரத்து செய்யப்படுவதன் மூலம் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
செயற்பாட்டு நிதியை மீளப்பெறும் வழிமுறை இன்றி எளிதாக்கப்பட்ட பெறுமதி சேர் வரி திட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் இயற்கை இறப்பர் தொழிற்துறை பரவலான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளுமென குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், சிறு தொழில் உரிமையாளர்களின் வாழ்வாதாரம், ஏற்றுமதி போட்டித்தன்மை மற்றும் அந்நிய செலாவணியை அச்சுறுத்தும் என்று இலங்கை இறப்பர் வர்த்தகர் குழு தெரிவித்துள்ளது.