தமிழ்நாடு கொந்தளித்தாலும் இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்காது என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கையில் தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்று கொடுக்க நினைத்தால், அது இந்தியாவால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புலிகளின் தலைவருடைய போராட்டம் தன்னை பொது வாழ்வியலுக்கு கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈழத் தமிழர்களுடைய அரசியல், வெறுமனே தமிழ்நாட்டு அரசியலை மட்டும் நம்பி இருக்க கூடாது என்ற கருத்தை ஆணித்தரமாக கூற விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் பிரபாகரனுக்கு பின்னால் தமிழ் மக்களை ஒன்றிணைக்க கூடிய தலைவர் ஒருவரை இனம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனவே ஈழத் தமிழர்கள் ஒரு தலைமையில் ஒரு தேசமாக ஒன்றுபட்டு தமிழர் பிரச்சினையை கையாள வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.



