பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி நகரில் பெப்ரவரி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் 7வது ஆசிய பிராந்திய மாநாடு மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆசிய, தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களின் இணைந்த இரண்டாவது மாநாட்டில் பிரதி சபாநாயகரும், குழுக்களின் தவிசாளருமான (வைத்தியர்) ரிஸ்வி சாலி தலைமையிலான இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழுவினர் பங்கேற்றனர்.
இது “பாராளுமன்றங்களின் எதிர்காலம் : நம்பிக்கை, உள்ளடக்கம், புத்தாக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மறுவரையறை செய்தல்” என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சிந்து மாநில சட்டமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மாநாடு பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் இருந்து பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய சட்டமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைதாங்கும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது.
”நவீன பாராளுமன்றங்கள் மக்களின் குரல்களை செவிமடுக்கும், உரையாடல்களை ஊக்குவிக்கும், வெளிப்படைத் தன்மையின் ஊடாகப் பொறுப்புக் கூறலைப் பலப்படுத்தும், குழுக்களை மேற்பார்வை செய்யும், ஊழலுக்கு எதிரான பொறிமுறை, இளைஞயோரின் பங்களிப்பு போன்றவற்றை வலுப்படுத்தும் நிறுவனங்களாக செயல்பட வேண்டும் என்பதை பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி வலியுறுத்தினார்.
அத்துடன், நீடித்த சமாதானம் மற்றும் ஜனநாயகத்தின் நிலைத்தன்மைக்கு அத்தியாவசியமான அடித்தளங்களாக நல்லிணக்கமும், நம்பிக்கையும் இருக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பாராளுமன்றக் கல்வி : நாளாந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கொள்கைகளை ஆழமாகப் பதியச்செய்தல்” என்ற தலைப்பில் நடைபெற்ற மற்றுமொரு அமர்வில் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட பிரஜைகள் கல்வி அமைப்பு, மாணவர் பாராளுமன்றங்கள், இளைஞர் பாராளுமன்ற முயற்சிகள் மற்றும் பாராளுமன்றத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கைகள் குறித்து பிரதி சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.



