மயில், குரங்குகளை கொல்ல இலங்கை அமைச்சர் உத்தரவு

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்கு, மயில் உள்ளிட்ட ஆறு வகை உயிரினங்களை கொல்ல இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஒப்புதல் அளித்துள்ளார்.

உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது, அமைச்சர் இந்த வியடத்தைக் தெரிவித்தார். தமது பயிர்களை குரங்குகள் சேதமாக்குவதாக அமைச்சரிடம் விவசாயிகள் இதன்போது முறையிட்டனர்.

செங்குரங்கு (Toque macaques), மயில், குரங்கு, மர அணில் (ராட்சத அணில்) முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றி ஆகிய உயிரினங்களையே இவ்வாறு கொல்ல முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேற்குறிப்பிடப்பட்ட உயிரினங்கள் – பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயாக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் பிரிவு தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எம். றியாஸ் அஹமட் – பிபிசி தமிழிடம் பேசுகையில்; “பிரச்சினைக்கான காரணத்தை பார்க்காமல், தற்காலிகத் தீர்வை பெறும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீரமானம், இன்னுமொரு சுற்றுச் சூழல் அனர்த்தத்துக்கு வழிவகுக்கும்” என எச்சரிக்கின்றார். மேலும், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறுகின்றார்.

உயிரினங்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து – சமநிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “ஒரு விலங்கினத்தின் தொகையில் பிரச்சினை ஏற்படுமாயின் ஒட்டுமொத்த உயிர்ச் சங்கிலியும் பாதிக்கப்படும்” என்றார்.