யுத்த காலத்தின்போது நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசாங்கத்தின் தகவல்களை கோடிட்டு தனியார் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் மோதல் நிலைமையில் முறைமைப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறை நிலவியதையும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை உறுதிசெய்யத் தவறியதையும் ஆவணப்படுத்திய இந்த அறிக்கை தமக்குக் கிடைக்கவில்லையென அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும், உயர்மட்ட அமைச்சரவை அமைச்சர்களது மறுப்புக்கு மத்தியிலும் இலங்கையில் மோதல் நிலை சார்ந்த பாலியல் வன்முறைக்கான பொறுப்புக்கூறல் அறிக்கை முன்கூட்டியே அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
“வழமையான நடைமுறைக்கமைய இந்த அறிக்கை முன்கூட்டியே இலங்கை அரசாங்கத்திடம் பகிரப்பட்டுவிட்டது” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் (Jeremy Laurence) தெரிவித்துள்ளார்.
மறுப்பு தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் சுருக்கமான மின்னஞ்சலில் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகள் அலுவலகத்துடன் அறிக்கையைப் பகிர்ந்துகொள்வது வழமையான நடைமுறையாகும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
இந்த அறிக்கை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. “இலங்கையின் ஆயுத மோதல் நடைபெறும் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் வெறுமனே தனித்தனியான சம்பவங்களின் தொகுப்பல்ல. மாறாக, அது ஒரு திட்டமிடப்பட்ட, பரவலான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட மீறல்களின் ஒரு பகுதியாகும்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.
“அறிக்கை இணையதளத்தில் வெளியாகி ஒரு வாரம் கடந்தபின்பும் நீதி அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் தமக்கு அது கிடைக்கவில்லை அல்லது அதன் இருப்பு பற்றித் தெரியாது எனக் கூறியுள்ளனர்” என்று குறித்த செய்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
“அந்த அறிக்கை வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றிருக்கலாம். அது யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், எனக்கு அந்த அறிக்கை கிடைக்கவில்லை. அறிக்கை உத்தியோகபூர்வமாகப் பெறப்பட்டதும் விசாரணைக்கு தேவைப்படும் விடயங்கள் இருக்கும்பட்சத்தில் தொடர்புடைய முகவர் நிலையங்களுக்குப் பரிந்துரைக்கப்படும்போது எம்மால் பதிலளிக்க முடியும்” என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதிலளித்துள்ளார்.
“ஐ.நா. ஆவணங்கள் எமக்கு அறிவிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட செயன்முறை உள்ளது. வெளிவிவகார அமைச்சு அதனைப் பெற்று, அது தொடர்பான தகவல்களை அமைச்சுக்கு அனுப்புகிறது. அறிக்கை இருக்கிறதென்றால், வெளிவிவகார அமைச்சு இன்னும் எங்களுக்கு எதையும் பரிந்துரைக்கவில்லை” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்துள்ளார்.
68 பக்கங்களைக்கொண்ட இந்த அறிக்கை ‘உரையாடலைத் தொடங்குதல்: மோதல் சார்ந்த பாலியல் வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நீதி மற்றும் இழப்பீட்டுத் தேவைகள்’ என்ற தலைப்பில் தற்போது பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் 50 ஆண்கள் மற்றும் பெண்களுடன் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆலோசனையின் கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளது.
போரில் உயிர்பிழைத்த பலரும், 2009இல் முடிவடைந்த ஆயுத மோதலின்போதும் அதற்குப் பின்னரும் இலங்கை பாதுகாப்புப் படையினரால் வன்புணர்வு மற்றும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் ஐ.நா. அறிக்கை பற்றிய அறிந்திருக்கவில்லையென மறுத்தபோதிலும் இலங்கையின் இராணுவம் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் வருண கமகே, இராணுவத்துக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்ததுடன், அவற்றை எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.



