ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் முடிவு குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை மீள அனுப்பும் செயற்பாட்டை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் நிறுத்தியதாகக் கூறப்படும் விடயம் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் இருந்து அகதிகளை மீள அனுப்பும் செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருந்தது. தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக கூறுகின்றவர்களின் நன்மை கருதியே இந்த செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.

இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள் அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தங்களுக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  எனினும், இலங்கைக்கு மீள அனுப்பப்பட்ட ஒருவர் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது, தாம் தலையிட்டு அவரை விடுதலை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் அதற்கமைய அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து மீள அனுப்படும் இலங்கையின் அகதிகளுக்கான எவ்வித திட்டமும் இலங்கையில் இல்லை என்றும் அதனால் புதிய திட்டம் ஒன்றை வகுக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதனால், மீள நாடு திரும்பும் இலங்கையின் அகதிகளை கைது செய்ய வேண்டாம் என தாம் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.