இலங்கை, வியட்நாம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தென்கொரிய ஆளுநரின் கருத்து

தென்கொரியாவில் நிலவி வரும் சனத்தொகை வீழ்ச்சியை ஈடுகட்ட, இலங்கை மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளிலிருந்து இளம் பெண்களை “இறக்குமதி” செய்ய வேண்டும் என ஜின்டோ கவுண்டி ஆளுநர் கிம் ஹீ-சூ தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஜொல்லா மாகாணத்தில் உள்ள ஹேனம் கலை மற்றும் கலாச்சார மையத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற ஆளுநர் கிம் ஹீ-சூ, கிராமப்புறங்களில் மக்கள் தொகை குறைந்து வருவதைக் குறித்து உரையாற்றியுள்ளார்.

அப்போது அவர்,

“சனத்தொகை நெருக்கடிக்கு நாம் முறையான தீர்வை காண வேண்டும். நிலைமை மோசமானால், கிராமப்புறங்களில் உள்ள பிரம்மச்சாரிகள் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கை அல்லது வியட்நாம் போன்ற இடங்களிலிருந்து இளம் பெண்களை நாம் இறக்குமதி செய்ய வேண்டும். மக்கள் இல்லாதபோது தொழில்துறையை மீட்டெடுப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த உரை யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து அவர் தன் கருத்துக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.