இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக LGBTQ சமூகத்தை ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
சகல பயணிகளுக்கும் இந்த நாடு பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்துவதே தங்களின் ஒரே நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டமிடப்பட்டுள்ள 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இலக்கை அடைவதற்காக கலாசாரத்திற்கு முரணான எதையும் செய்ய மாட்டோம் என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஒரு கடிதம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாகவே புத்திக ஹேவாவசம் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். EQUAL GROUND என்ற அமைப்புடன் இணைந்து LGBTQ சுற்றுலா மேம்பாட்டுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஒப்புதல் அளிப்பதாகக் கூறி, புத்திக ஹேவாவசம் கையெழுத்திட்ட ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றது.
இந்தநிலையில், “இது பிரசாரமோ அல்லது விளம்பரத் திட்டமோ அல்ல. இது சமத்துவத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் வழங்கும் உறுதிப்படுத்தல் மட்டுமே,” என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் தெளிவுபடுத்தினார்.
“தமது நிறுவனம் வழங்கிய கடிதம் குறித்து சமூகத்தில் ஒரு தவறான கருத்து உள்ளது. அந்தக் கடிதம் LGBTQ சமூகம் சுற்றுலாத் துறையுடன் எவ்வாறு இணைவது என்பது பற்றி மட்டுமே பேசுகிறது’ என்று அவர் கூறினார்.
அரசாங்கமும், நிறுவனமும் அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் பாலினத்தைச் சேர்ந்தவர்களின் சமத்துவத்தைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன என்று கூறிய அவர், நாட்டின் சட்டதிட்டங்களுக்கோ அல்லது கலாசார விழுமியங்களுக்கோ எதிராகச் செயல்பட மாட்டோம் என்று உறுதியளித்தார்.
அதேபோன்று ‘கர்தினாலின் உணர்வுபூர்வமான கருத்து தவறான விளக்கத்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புகிறேன்’ என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.