தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் – சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு இலங்கை அனுமதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தத் தீர்மானத்தில்   சீன மக்கள் குடியரசை மாத்திரமே ஏற்றுக்கொள்வதாகவும் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் என்பதை இலங்கை அதன் வெளிவிவகார கொள்கையில் கடைப்பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் பேணப்படும் என்றும் குறித்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தைவான் முழுமையாக சீனாவுக்குச் சொந்தமான பகுதியென சீனா தொடர்ந்து கூறிவருதுடன், அவ்வபோது தாய்வானுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்  வகையிலும் சீனா ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், தாய்வான் சுதந்திரமான நாடு என வாதாடி வருகின்றது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன பயணத்துக்கு முன்னர் இத்தகையதோர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.