சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப சட்ட கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும், செயல்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இலங்கை தொடர்பான பரிந்துரை அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
போர் மற்றும் மோதல் சூழலில் பதிவாகிய பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, பாலியல் வன்முறை குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், நிலைமாறுகால நீதி செயல்முறைகளைக் கொண்ட நாடுகளின் அதிகாரிகளிடம் இதற்கான கோரிக்கை விடுப்பதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் தொடர்பான பாலியல் வன்கொடுமையால் பிறந்தவர்கள் உட்பட, உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, உருமாறும் இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களை மேம்படுத்துவதற்கு, போதுமான நிதியை ஒதுக்குமாறு சர்வதேச சமூகத்திடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் அவதானிக்கப்பட்ட பேர்க்கால பாலியல் துஷ்பிரயோக வன்முறை சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு பொதுச் செயலாளரால் விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில், பாதுகாப்புப் படையினரால் தமிழர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் 2024 ஆம் ஆண்டு விசேட அறிக்கையில் பதிவாகியிருந்தமையை பொதுச் செயலாளர் தனது புதிய அறிக்கையில் நினைவுப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் தொடர்ச்சியான தாமதம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக, இலங்கையின் வடக்கு பகுதியில் உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவதற்கான திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், தமக்கு ஏற்பட்ட களங்கம் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் அதில் பங்கேற்கத் தயங்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.