இலங்கை இரு நாடுகளின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்போடு கைகோர்க்க வேண்டும் – இந்திய தூதுவர்

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை இந்தியா 2047 இலும் இலங்கை 2048 இலும் கொண்டாடவுள்ள நிலையில் இலங்கை, இந்திய நாடுகள் ஒத்துழைப்புடன் இன்றிணைந்து செயற்பட வேண்டியது மிக முக்கியம் என இலங்கைக்கான இந்திய  தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே இந்திய தூதுவர் இதனை தெரிவித்தார்.

 மேலும் கருத்துத் தெரிவித்த இந்திய தூதுவர்,

இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும்   பல்வகைமையுடைய ஜனநாயகத்தையும் கொண்டுள்ள நாடாகும். இந்த நிலைமை இலங்கைக்கும் பொதுவானாதாகும். மேலும் இலங்கை இன்னும் சில நாட்களில் தனது 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே மிகவும் நெருங்கிய   நண்பர்கள் என்ற அடிப்படையில் நாம் இந்நிகழ்வை ஒற்றுமையின் உண்மையான ரிதமாக கொண்டாட வேண்டும். இது வெவ்வேறு இசைக் குழுக்களின் இசைச் சங்கமம் மட்டுமல்ல இது இலங்கை மற்றும் இந்தியாவின் ஒற்றுமையையும் குறிக்கும்.

75 ஆவது சுதந்திர தினத்துடன் நாமும் எமது ஒற்றுமை மற்றும் 75 வருட இராஜதந்திர உறவைக் கொண்டாடுவதுடன் எமது நூற்றாண்டு சுதந்திர விழாவை நோக்கிய எமது பயணத்துக்காக எம்மை மீண்டும் அர்ப்பணிப்போம் என்றும் தெரிவித்தார்.

அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், இராஜதந்திரிகள், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமன்றி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இப்பயணத்தில் பங்கு வகிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை , இந்தியப் பிரஜைகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.