அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு: இலங்கையை எச்சரிக்கும் நிபுணர்கள்!

இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது  ஓர் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுத்ததாகவும் அதை மறைக்கத் திட்டமிட்டதாகவும்   குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இதை சட்டரீதியாக எதிர்கொள்வதாகவும் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதானி குழுமத்தின் இலஞ்ச ஊழல் தொடர்பான புதிய விபரங்கள் வெளியானதும், இலங்கையில் அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என பலர் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுரகுமார திசநாயக்கவும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மக்கள் சக்தியும் ஊழலை ஒழிக்கப்போகின்றோம் என வாக்குறுதியளித்துள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தனது தேர்தல் வெற்றிக்கு முன்னதாக அனுரகுமாரதிசநாயக்க அதானிகுழுமத்தின் திட்டங்களை இரத்துச்செய்வேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.