நாட்டை அதிரவைத்த சீரற்ற காலநிலை: மண்சரிவு, வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 35ஐ கடந்தது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
குறிப்பாக பதுளை மாவட்டத்தில் மாத்திரம் இன்றைய தினம் (27) 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்தின் மடுல்சீமை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.
பதுளை மாவட்டத்தின் புசல்லாவ, தல்தென பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் வீடு ஒன்று மண்ணுக்குள் புதையுண்டதில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பகுதியில் வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று தடம்புரண்டு வீழ்ந்து மூழ்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று (27) உயிரிழந்தனர்.
அதேநேரம் நாடளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளதுடன் அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் உட்பட பல பகுதிகளில் 200 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவினை இழப்பீடாக வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.