ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நேரடியாக எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தொடர்பில் இலங்கை கனியவள கூட்டுதாபனம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு ஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி, தற்போது விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை காலமும் இலங்கை, விநியோகஸ்தர்களின் ஊடாக எரிபொருளை இறக்குமதி செய்து வந்தது.
இந்தநிலையில் நேரடி கொள்முதல் நடவடிக்கைகளுக்கு இலங்கை கனியவள கூட்டுதாபனம், ஐக்கிய அரபு இராச்சிய அரசுக்கு சொந்தமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிபர் விடுத்த அழைப்பிற்கு இணங்க இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அத்துடன் கனியவள திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அண்மையில் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



