75 வருடத்தில் இலங்கையானது “தோல்வியடைந்த நாடாகவே உள்ளது”-முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

“1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 75 வருடத்தில் இலங்கையானது “தோல்வியடைந்த நாடாகவே உள்ளது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஒரு நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட காலமாகும் என்றார்.

காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிவுக்குள்ளான பின்னரும், சுதந்திரத்தின் போது, ​​இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், 75 இல், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மட்டத்திலும் பரவலான ஊழல், இலங்கை அரசியலின் நற்செய்தியாக மாறியுள்ளதாகவும், நீதித்துறை,  காவல் மற்றும் பொது சேவை உட்பட ஜனநாயக நிர்வாகத்தின் முக்கிய தூண்களை கீழிறக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒரு ஐக்கிய பன்மைத்துவ அரசை உருவாக்க சுதந்திர இலங்கை பல்வேறு இன மற்றும் மத சமூகங்களை “ஒன்றாக இணைக்க” தவறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசியா அறக்கட்டளை மற்றும் சென்னை ஆசிய இதழியல் கல்லூரி இணைந்து நடத்திய ஒன்லைன் நிகழ்வின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.