கஞ்சா பயிரிடும் திட்டத்திற்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு!

வெளிநாட்டவர்களுக்கு  இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

இத்தகைய அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என அந்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்று மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. மனநோய், போதை பழக்கம், நுரையீரல் நோய் மற்றும் வீதி விபத்துகள் போன்றனவும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

எனவே, இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்ற போதிலும் இலங்கையர்களுக்கு சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.