அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பும் உரிமை இலங்கைக்கு உள்ளது : நாமல்

இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சட்டவிரோதமானது என்றும், இது குறித்து அமெரிக்காவிடம் விளக்கம் கோர இலங்கைக்கு முழு உரிமை உண்டு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விசேட மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். காலியில் இருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் இலக்கு வைக்கப்பட்டதை நாமல் ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்தார்.

இது சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறித்த தாக்குதல் இலங்கையின் கடல் எல்லைக்கு மிக அண்மையில் நடந்துள்ளதால், பிராந்திய பாதுகாப்பு மற்றும் கடல்சார் அமைதி குறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப வேண்டிய தார்மீக உரிமை இலங்கைக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய நடவடிக்கைகள் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் என்றும், இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் மத்திய கிழக்கு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் மூலோபாய கடற்பரப்பிற்கு அருகில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பிராந்திய அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.