ஐ.நா.வின் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைக்கு இலங்கை விமர்சனம்

மனித உரிமைகளில் தங்களின் உள்நாட்டு முன்னேற்றத்தை அங்கீகரிக்குமாறும் பிளவுகளை ஆழப்படுத்தும் வகையிலான தண்டனை வழிமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறும் இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொது விவாதமொன்றில் உரையாற்றிய இலங்கை பிரதிநிதி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளதுடன் பல நாடுகள் களத்தில் செய்யப்பட்ட உறுதியான முன்னேற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்மானம் 60/251 ஐ நினைவூட்டிய அவர், களத்தில் வெளிப்படையான முன்னேற்றத்தை பல நாடுகள் ஒப்புக்கொள்வதை இலங்கை பாராட்டுகிறது என்று பிரதிநிதி கூறினார்.

“நாடு சார்ந்த சூழ்நிலைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், மேலும் கணிசமான முன்னேற்றங்களை அடைந்த நாடுகளுக்கு பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேற ஒரு பாதை உருவாக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடு மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகத்தினால் நிறுவப்பட்ட வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் இலங்கை பிரதிநிதி விமர்சித்துள்ளார்.

இத்தகைய வழிமுறைகள் உள்நாட்டு சட்ட செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், இறையாண்மையின் கொள்கைகளை மீறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் உள்நாட்டு வழிகள் மூலம் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.