இலங்கை நெருக்கடி: பிரதமராக பொறுபேற்க தயார் – சஜித் பிரேமதாச

257 Views

சில இணக்கப்பாடுகளுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவரான தான் பிரதமர் பதவியை ஏற்க தயாராக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுடன் இணைந்து குறுகிய கால அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி, சஜித் பிரேமதாஸ நான்கு யோசனைகளை முன்வைத்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி

01.குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு இணக்கம் வெளியிடுதல்.

02.இரண்டு வார காலத்திற்குள் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன், அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை அமல்படுத்தி, நடைமுறைப்படுத்துதல்.

03.தம்மால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் ஊடாக, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதற்காக, அரசியலமைப்பிலுள்ள சரத்துக்களுக்கு அமைய, மிகக் குறுகிய காலத்தில் அனைத்து கட்சிகளின் ஆதரவை பெற்று, அதனை செயற்படுத்தல்.

04.பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வந்து, சட்டவாதிக்கத்தை உறுதிப்படுத்தி, மேல் குறிப்பிட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர், நிரந்தர அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்காக மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்கும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துதல்.மேல் குறிப்பிட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லாது தவிர்ப்பதற்கும் தமது குழுவிடம் நிரந்தரமான வேலைத்திட்டமொன்று உள்ளது எனவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைகளின் பிரகாரம், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதமொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply