மத்திய கிழக்கு பிராந்தியங்களில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அமைதியை உறுதிப்படுத்துமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு உட்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஒரு அடிப்படை கடமையாகும் என இலங்கை வலியுறுத்தியுள்ளது.
மனித உயிர்களின் புனிதத்தன்மையைப் பேணுவதிலும், உலகளாவிய அமைதியை நிலைநாட்டுவதிலும் இலங்கை உறுதியாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பிட்டுள்ளது. இந்த மோதல்கள் மனிதநேய நெருக்கடியை ஏற்படுத்துவது மட்டுமன்றி, உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்திலும் நேரடித் தாக்கத்தைச் செலுத்தும் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் விளைவுகள் அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்பதால், நிலைமையை இலங்கை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிராக சக்தியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனக் கொள்கைகளை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும் என்று இலங்கை மீள வலியுறுத்தியுள்ளது.
பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, அமைதி வழியில் தீர்வு காண முன்வருமாறு இலங்கை அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.



