தற்போதைய பொருளாதார நெருக்கடியை இலங்கையால் தனித்துநின்று சமாளிக்கமுடியாது

71 Views

தற்போதைய நெருக்கடிநிலையை இலங்கையால் தனித்துநின்று சமாளிக்கமுடியாது. எனவே இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதால் ஏற்படக்கூடிய சுமையை நாட்டின் இருதரப்பு, பல்தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் என்று சர்வதேச ரீதியில் தொழிலாளர் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் ‘இன்டஸ்ரியல் குளோபல் யூனியன்’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

‘இன்டஸ்ரியல் குளோபல் யூனியன்’ என்பது உலகளாவிய ரீதியில் சுமார் 140 நாடுகளைச்சேர்ந்த 50 மில்லியன் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் சர்வதேச அமைப்பாகும்.

உலகளாவிய ரீதியில் சிறந்த தொழில் சூழல், தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றை முன்னிறுத்திப் போராடும் நோக்கில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் இலங்கையைச் சேர்ந்த பல துணை நிறுவனங்களும் தொழிலாளர்களும் அங்கம்வகிக்கின்றனர்.

அந்தவகையில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், ‘இன்டஸ்ரியல் குளோபல் யூனியன்’ அமைப்பு மேற்குறிப்பிடவாறு வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடிநிலையை இலங்கையால் தனித்துநின்று சமாளிக்கமுடியாது என்றும், எனவே சர்வதேச சமூகத்தின் மிதமிஞ்சிய ஒத்துழைப்பு அவசியம் என்றும் சுட்டிக்காட்டியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையின் கடன்களை மறுசீரமைப்பதால் ஏற்படக்கூடிய சுமையை நாட்டின் இருதரப்பு, பல்தரப்பு மற்றும் தனியார் கடன்வழங்குனர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளது.

‘இலங்கைக்கான பெருந்தொகை கடன்வழங்குனர்களில் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகிய சர்வதேச பொதுக்கட்டமைப்புக்களும் உள்ளடங்குகின்றன. வெளியகக்கடன் சுமையிலிருந்து இலங்கைக்கு உடனடி விடுதலை (மீட்சி) அவசியமாகின்றது.

எனவே சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் கடன்வழங்குனர்களுடன் கலந்துரையாடி, இலங்கைக்கு உதவக்கூடியவாறான பொறுப்புவாய்ந்த கட்டமைப்பொன்றை உருவாக்கவேண்டும்.

தற்போது இலங்கையில் தொழில்புரியும் தரப்பினர் மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். அவ்வாறிருக்கையில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக வறிய தரப்பினருக்கு அவசியமான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது’ எனவும் ‘இன்டஸ்ரியல் குளோபல் யூனியன்’ அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply