மலையகம்: ஒடுக்கப்பட்ட சமூகம்-துரைசாமி நடராஜா

293 Views

மலையக பெருந்தோட்ட மக்களின் சமகால நெருக்கீடுகள் தொடர்பில் பல்வேறு அதிருப்தியான வெளிப்பாடுகள் இருந்து வருகின்றமை தெரிந்ததேயாகும்.  அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கீடுகள் ஒரு புறமிருக்க தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பெனிகளின் கடும்போக்குத் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதிலிருந்தும் மீள்வதற்கு தொழிலாளர்களிடையே ஒற்றுமை வலுப்பெற வேண்டியது அவசியம் என்பது உண்மையே எனினும் அரசியல், தொழிற்சங்கங்கவாதிகளின் ஐக்கியம்மிக்க செயற்பாடுகளும் இதற்கு உந்துசக்தியாகும் என்பதையும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

உலகின் பல சமூகங்கள் தற்போது தமது இருப்பையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டு வேகமாக முன்னேறிச் செல்கின்றன.சமகால வாழ்க்கை நிலைமைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தம்மை மாற்றிக்கொண்டு தொடரும் இவர்களின் பயணம் பலராலும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்றது.எனினும் இலங்கைக்கு மலையக மக்கள் வருகைதந்து 200 வருடங்களை அண்மிக்கின்றபோதும் வாழ்க்கை நிலைமைகள் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியினை அடையவில்லை.. “இலங்கையில் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் பல்பரிமாணம் உடையவையாகக் காணப்படுகின்றன.

குறிப்பாக சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மலையகத் தமிழர்கள் நாளாந்தம் பல்வேறு வடிவங்களிலான ஒடுக்கு முறைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் ” என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா சுட்டிக்காட்டியுள்ளமை மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசமும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்பதற்கு சான்றாகும்.மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா என்ற மிகக் குறைந்தளவிலான நாளாந்த சம்பளம் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளதாகவும் ஒபொகாடா தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம் பாதிப்பு

ஒரு காலத்தில்  இலங்கையின் தேசிய வருமானத்தில் அதிகளவான வகிபாகத்தைக் கொண்டு செல்வம் கொழிக்கும் விளைநிலமாக விளங்கிய மலையக பெருந்தோட்டங்கள்,  இன்று பொழிவிழந்து விளைச்சல் கீழிறங்கிய நிலையில் காணப்படுகின்றன.இங்குள்ள மக்களின் வாழ்க்கையும் இதனை ஒத்ததாகவே அமைந்திருக்கின்றது என்பது வெளிப்படையாகும்.

கம்பனியினரின் தொழில் ரீதியான அடக்குமுறைகளும் அடாவடித்தனங்களும் வரம்பு மீறிச் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இம்மக்களின அபிவிருத்தி என்பது கானல்நீராகி வருகின்றது.கம்பனியினர் தோட்டங்களை பொறுப்பேற்ற காலத்தில் தொழிலாளர் நலன்கள் குறித்து வழங்கிய வாக்குறுதிகள் இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்குவதில் இழுபறி, நலனோம்பு சேவைகள் புறக்கணிப்பு, வேலைநாள் குறைவு, மேலதிகமாக பறிக்கும் தேயிலைக்கு உரிய விலையினை கொடுப்பதில் பின்னடிப்பு என்று கம்பனியினர் பலவித ஒடுக்குமுறைகளையும் தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

தேயிலைச் செடிகள் உரியவாறு பராமரிக்கப்படுவதில்லை.கிருமிநாசினி தெளித்தல், பசளையிடுதல் போன்ற நடவடிக்கைகளும் முறையாக இடம்பெறுவதில்லை.இதனால் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில்  தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.சில தோட்டங்கள் உரிய பராமரிப்பின்றி பற்றைக் காடுகளாகி வருகின்றன.விஷ ஜந்துக்களின் வாழ்விடமாகியுள்ள தேயிலை விளை நிலங்களில் தொழிலாளர்கள் தொழில் புரிவதற்கே அச்சப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியப்  பற்றாக்குறை காரணமாக சில தொழிலாளர்கள் மாற்றுத் தொழில்களை நாடிச் செல்லும் நிலையும் அதிகரித்து வருகின்றது.இதனிடையே தொழிலாளர்களின்  அமைதியான தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு இடையூறு விளைவித்து, தொழிலாளர்களை ஆத்திரமூட்டி, அதன்மூலம் அமைதியற்ற சூழலை தோட்டங்களில் ஏற்படுத்த கம்பெனிகள் முயற்சித்து வருவதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் உள்ளிட்ட பலரும் தமது கண்டனங்களையும் வெளிப்படுத்தி வருகின்றமையும் நோக்கத்தக்கதாகும்.தொழிலாளர்களின் தொழில் ரீதியான பிரச்சினைகள் ஒருபுறமிருக்க தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் இன்னும் அதிகமுள்ளன.

தொழிலாளர்கள் பலர் லயத்துச் சிறைகளில் வசதியின்றி வாடும் நிலையில் இவர்களிடையே தனிவீட்டுக் கலாசாரத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.அரச தொழில் வாய்ப்புக்கள் மற்றும் நிர்வாக ரீதியான செயற்பாடுகளில் மலையக இளைஞர்கள் அதிகமாக உள்ளீர்க்கப்பட வேண்டும்.இதற்கான கல்வி வாய்ப்புக்கள் விரிவுபடுத்தப்படுதல் வேண்டும்.மலையக அடையாளத்துடன் கூடிய பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடு குறித்தும் இதன் சாதக விளைவுகள் குறித்தும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வந்தார்.

எனினும் அவர் வாழும் காலத்தில் அது சாத்தியப்படாமல் போயுள்ள நிலையில் எதிர்காலத்திலேனும் அது சாத்தியப்படுதல் வேண்டும்.அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், மற்றும் சமூக ரீதியிலும் மலையக மக்கள் உச்சத்தை தொடவேண்டிய இலக்குகள் இன்னும் அதிகமுள்ளன.இவற்றை உரியவாறு அடைந்து கொள்வதற்கு மலையக மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.அத்தோடு அரசியல் தொழிற்சங்கவாதிகளின் வழிகாட்டுதல், அழுத்தம் என்பனவும் அவசியமாகத் தேவைப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

 எட்டயப்பர்கள்

மலையக மக்கள் உரிமைகள் பலவற்றையும் பெற்றுக் கொள்வதற்கு ஐக்கியம் அவசியமாகும் என்பதனை அரசியல் ,தொழிற்சங்கவாதிகள் ஆழமாகவே வலியுறுத்தி வருகின்றனர்.எனினும் மக்களை ஒன்றுபடுமாறு கூறும் அரசியல்வாதிகள் தமக்கிடையே பிரிந்து செயற்படுவது வேடிக்கையாகவுள்ளது.

தாம் ஒன்றிணைந்து செயற்பட்டால் தலைமைத்துவம் பறிபோய்விடும் என்ற நினைப்பு சில மலையக அரசியல்வாதிகளிடையே காணப்படுகின்றது. விட்டுக்கொடுப்பு, அர்ப்பணிப்பு, சமூகம் தொடர்பான வலி என்பன பெரும்பாலும் இவர்களிடையே காணப்படவில்லை. ஒன்றிணைந்து ஐக்கியத்துடன் செயற்படுங்கள் என்று கூறும் நிலையில் யார் முதலில் முன்வருவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

“பூனைக்கு மணி கட்டுவதற்கு ” யாரும் தயாராக இல்லை.வெறும் வாய்ச்சவடால்களால் இவர்கள் மலையக மக்களின் வயிற்றை நிரப்ப முயலுகின்றனர்.இத்தகைய செயற்பாடுகள் மலையக மக்களின் எழுச்சிக்கு உந்துசக்தியாகாது.முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சகோதர அரசியல்வாதிக்கோ அல்லது சமூகத்திற்கோ ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்படும் நிலையில் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதையும், அரசுக்கு அழுத்தம் வழங்குவதையும் தொடர்ச்சியாகவே அவதானிக்க முடிகின்றது.

வடபகுதி அரசியல்வாதிகளும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள ஐக்கியத்துடன் காய்நகர்த்தலை மேற்கொள்ளுகின்றார்கள்.எனினும் இந்த ஐக்கியம் மலையக அரசியல்வாதிகளிடையே காணப்படாமை சாபக்கேடேயாகும்.

இத்தகைய ஐக்கியமின்மையை சாதகமாக்கிக் கொள்ளும் மூன்றாம் தரப்பினர் மலையக மக்களின் உரிமைகளை மழுங்கடிக்கச் செய்து அவர்களை சகல துறைகளிலும் நிர்வாணப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.எனினும் இதனைத் தட்டிக் கேட்பதற்கு திராணியற்ற நிலையில் எம்மவர்கள் ஊடக அறிக்கைகளில் மட்டுமே உயிர் வாழ்வது வெட்கக்கேடேயாகும்.

மலையக அரசியல்வாதிகளின் சமூகம்சார் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே பலவித அதிருப்திகள் காணப்படுகின்றமை தெரிந்ததேயாகும். இந்நிலையில் மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றபோது தொடர்ந்தும் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதோடு தமது பணியை நிறுத்திக்கொண்டு மக்களை ஏமாற்ற முனைவார்களானால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்.

மலையக அரசியல்வாதிகள் முதலில் ஐக்கியத்துடன் செயற்பட்டு, முன்னுதாரணமாக இருந்து மக்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழிசெய்தல் வேண்டும். இம்மக்கள் துரிதமாக தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து அவர்களின் தேசிய நீரோட்டக் கனவை மெய்ப்பித்தல் வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்தும் பழைய பாணியில் அமைச்சுப் பதவிகளை குறிவைத்து, சமூகத்தை காட்டிக் கொடுத்து எட்டயப்பர்களாக செயற்படுமிடத்து வரலாறு பழி சொல்வது மட்டுமன்றி வாழ்க்கையும் பயனற்றுப் போகும்.

Leave a Reply