இலங்கை:கடந்த நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களில் 709 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளனா்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தொிவித்துள்ளாா்.
இவற்றில் உந்துருளி  விபத்துக்களே அதிகளவாக பதிவாகியுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது குறித்து மேலும் கருத்து தொிவித்த அவா், கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் நடந்துள்ளன. குறிப்பாக 667 போ் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிாிழந்தனா். அத்துடன் மொத்தமாக 709 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,160 பாாிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் 3,201 சிறு விபத்துகள் நடந்துள்ளன. குறிப்பாக உயிாிந்தவா்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், உந்துருளி  ஓட்டுனா்களே அதிகளவில் அடங்கியுள்ளனா்.

உயிாிழந்த 709 பேரில் 220 பேர்  உந்துருளி ஓட்டுநர்கள் ஆவதுடன் 102 பேர் பயணிகள் ஆவா். அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளனா். இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை  உந்துளியால் ஏற்படுகின்றன.

இரண்டாவது அதிக விபத்துக்கள் முச்சக்கர வண்டிகளால் ஏற்படுகின்றன.
இதனால் வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை உந்துளி மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை என தொியவந்துள்ளது.