மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், நாட்டின் மின்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான விசேட திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மின்சக்தி நுகர்வைக் குறைக்கும் நோக்கில், அரச ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மேலதிக விடுமுறை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சாத்தியமான துறைகளில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அமைச்சுகள் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் ஊழியர்களை சேவைக்கு அழைப்பது மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், சுற்றுலா, கடற்றொழில், கைத்தொழில், விவசாயம், துறைமுகம், விமான நிலையம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற முக்கிய துறைகளில் குறைந்த மின்சக்தி நுகர்வுடன் சேவைகளைத் தொடர்வதற்கான மாற்று வழிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
முக்கிய துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய எரிபொருள் அளவைத் தீர்மானிக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமித்து, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
தற்போதைய சவால்களைச் சமாளிக்க எரிபொருள் நுகர்வை நிர்வகிப்பதே QR முறைமையின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த முறைமையை மேலும் முறைப்படுத்த அந்தந்த அமைச்சுகள் தமக்குரிய தரவுகளை டிஜிட்டல் விவகார அமைச்சுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் டிஜிட்டல் அமைச்சு இணைந்து QR முறைமையை மேம்படுத்தும். தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு அரச விழாக்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் எரிபொருள் பிரச்சினையால் விவசாயிகள் மற்றும் சிறு கைத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தனியார் துறைக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்க அனைவரதும் அர்ப்பணிப்பு அவசியம் என்றும், தேவைப்படும் தரப்பினருக்கு மானியங்கள் மூலம் வசதிகளை வழங்க நேரிடும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.



