எதிர்க்கட்சி தலைவர் – ரஷ்ய தூதுவருக்கிடையில் விசேட சந்திப்பு

இலங்கையில் கடந்த வாரம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ரஷ்ய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் , எதிர்க்கட்சித் தலைவருக்கிடையிலான இந்த சந்திப்பு செவ்வாய்கிழமை (09)  கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஷ்ய தூதுவருக்கு இதன் போது விளக்கமளித்துள்ளார்.

மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், சேதடைந்துபோன ரயில் போக்குவரத்துப் பாதைகள், வீதிக் கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீள புனர்நிர்மாணம் செய்வதற்கும் தேவையான ஆதரவுகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறே, இந்த இக்கட்டான நேரத்தில், இதுவரைக்கும் ரஷ்யா நல்கிய ஆதரவிற்காக எதிர்க்கட்சித் தலைவர், முழு இலங்கை மக்களின் சார்பாக தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நீண்டகால நண்பர்களாக இரு நாடுகளுக்கும் இடையே காணப்பட்டு வரும் வர்த்தக ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்தத் தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருமாறும், வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இது பெரும் உறுதுணையாக அமையும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.