ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (18) வவுனியாவிலுள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இந்த ஆண்டில் கூட்டணியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் மாகாணசபைத் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதில் கூட்டணியின் வகிபாகம் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஈழமக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மு. சந்திரகுமார், கூட்டணியின் செயலாளர் நா. ரட்ணலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போது, தமிழினத்தின் அரசியல் இருப்பைப் பாதுகாப்பதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்தும் ஒற்றுமையும் அவசியம் என கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.



