யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட அவதானம்!

வடக்கில் வன வள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுகளுடன் கலந்துரையாட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இடம்பெற்ற போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அரசாங்க அதிபரால் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியான காணி பயன்பாட்டு விடயங்கள் ஆராயப்பட்டு, பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இதன்படி, மாவட்ட காணி பயன்பாட்டு குழுவினால் வழங்கப்பட்ட அரச காணிகள் வழங்கப்பட்ட திகதியில் இருந்து 06 மாத காலம் தொடக்கம் ஒரு வருடம் வரையில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தால், அந்த காணிகளுக்கான அனுமதியை இரத்து செய்யுமாறும் அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காணிகள் தொடர்பாக பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அதன் அனுமதியைப் பெற்ற பின்னரே மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன வளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் ஆளுகைக்கு உட்பட்டு வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச காணிகளை பொதுமக்களுக்கு அல்லது பொதுத்தேவைகளுக்காக அவசியத் தேவைக்கான காணிகளை மட்டும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கூறியதுடன், அவசியமற்ற விடயங்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறும் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.