”ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குள்,அரசு தனது மக்களைப் பாதுகாக்காத சூழலில் அங்கே இறைமைக் கோட்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பது இக்கோட்பாட்டின் மிக அடிப்படைக் கொள்கையாகும். அரசே தனது சொந்த மக்கள் மேல் தாக்குதலைத் தொடுக்கும் போது அங்கே இறைமைக் கோட்பாடு ஒருபோதுமே அரசுக்குப் பாதுகாப்பை வழங்க முடியாது”
என இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மிகத் தெளிவாக கூறினார்.
சிறிலங்கா அரசுத் தலைவரின் கொள்கைப்பிரகடன உரைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
சிறீலங்காவின் அதிபர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்துக்காட்டி கஜேந்திரகுமார் தனது உரையை ஆற்றினார்.
(சிறிலங்கா அதிபரின் உரையில்) மூன்றாம் பக்கத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.
“மக்களால் அளிக்கப்பட்டிருக்கும் ஆணையை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்“,
மேலும் அவர் (சிறிலங்கா அதிபர்) அந்தப் பந்தியில் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்.
“எப்படிப்பட்ட எதிர்பார்ப்போடு மக்கள் எமக்கு இந்தப் பலமான ஆணையை தந்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக எங்களுக்கு மிகவும் தெளிவான புரிதல் இருக்கிறது. எக்காரணம் கொண்டும் அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு மழுங்கடிக்கப்பட நாம் எந்தவிதத்திலும் இடம் கொடுக்க மாட்டோம்.”
(திரு.அங்கஜனை விழித்து) உதவி தவிசாளர் அவர்களே,
தனது கட்சியைப் பொறுத்தவரையில் மக்கள் கொடுத்த ஆணை தொடர்பாக அவர் (சிறிலங்கா அதிபர்) அப்படிப்பட்ட ஒரு புரிதலைக்கொண்டிப்பது சரியானதாக இருக்கலாம். ஆனால் அந்த ஆணை வடக்குக்கும் கிழக்குக்கும் பொருந்தும் என்று சொல்லும் அவரது கூற்று தவறானதாகும்.
வடக்கையும் கிழக்கையும் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றே மக்கள் ஏகமனதாக,தங்கள் ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அமர்ந்திருக்கும் உங்களையும் உள்ளடக்கியே இதனை நான் கூறுகின்றேன்.
”தமிழ் மக்களின் உரிமைகள்” என்று சொல்லும் போது தமிழர் என்ற எங்கள் அடையாளம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
சிறீலங்கா பல்லின மக்களைக்கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டில் இரு தேசங்கள் இருக்கின்றன என்பதுடன் எமது உரிமைகளும் சமத்துவமாக இருக்க வேண்டும். எங்கள் அந்தஸ்து சமமானதான இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அந்தஸ்த்தின் அடிப்படையிலேயே சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அரசியல் யாப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே கடந்த தேர்தலில் மக்கள் ஏகமனதாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
உங்களை எடுத்துக்கொண்டால் (திரு.அங்கஜன்),தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நீங்கள் நன்றி செலுத்தி ஆற்றிய உரைகளில்
நீங்கள் தமிழர் உரிமைகளுக்கு நீங்கள் எதிரானவன் அல்ல என்றும் அதற்கு மாறாக தமிழர் உரிமைகளின் பக்கமே நீங்கள் நிற்கிறீர்கள் என்பதையும் நீங்கள் முக்கியமாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறும் காலம் வரையும் பொறுத்திருக்க முடியாது என்றும் அதற்கிடையில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதே உங்கள் பொறுப்பு’ என்றும் நீங்கள் தெரிவித்தீர்கள்.
ஈபிடிபியின் தலைவரான கெளர டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது தேர்தல் பரப்புரையில் பயன்படுத்திய சுவரொட்டிகளில் ”தமிழர் தேசம் தலைநிமிர” என்ற சொற்றொடரைத் தனது சுலோகமாகப் பயன்படுத்தியிருந்தார்.
ஆகவே ”நாம் ஒரு தேசம்” என்பது வடக்கிலும் கிழக்கிலும் ஏகமனதாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆணை மீறப்படமுடியாத ஒன்றாகும். இந்த நாட்டின் 72 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக்கொண்டால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகவே இந்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்
துணைத் தவிசாளர் அவர்களே,இன்னொரு விடயத்தை இங்கு நான் முன்வைக்க விரும்
புகிறேன்.
நாட்டின் அதிபர் இறைமையைப் பற்றி உரையாற்றியிருக்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் இந்த நாட்டின் இறைமை மீறப்படுவதற்கு தான் அனுமதிக்கப்போவதில்லை என அவர் கூறியிருக்கிறார். அது சரியானது தான்.
நாட்டின் அதிபர் என்ற வகையில் அப்படி ஒரு கூற்றை முன்வைப்பது அவரைப்பொறுத்த வரையில் சரியானது தான். அதே வேளையில் பன்னாட்டு உறவுகளைப் பொறுத்த வரையில் இறைமை தனித்து வருவதில்லை, அதற்குக் குறிப்பிட்ட கடப்பாடுகள் உண்டு என்பதை அவர் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்குள்,அரசு தனது மக்களைப் பாதுகாக்காத சூழலில் அங்கே இறைமைக் கோட்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பது இக்கோட்பாட்டின் மிக அடிப்படைக் கொள்கையாகும்.
அல்லது அதைவிட இன்னும் மோசமான ஒரு சூழ்நிலையில்
அரசே தனது சொந்த மக்கள் மேல் தாக்குதலைத் தொடுக்கும் போது அங்கே இறைமைக் கோட்பாடு ஒருபோதுமே அரசுக்குப் பாதுகாப்பை வழங்க முடியாது.
இந்த நாடு ஒரு போருக்கு முகங்கொடுத்திருக்கிறது.
போரில் மிகக் கொடூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என்று முழு உலகமே சொல்லிக்கொண்டிருக்கிறது. இதில் அரசு தான் முதலாவது குற்றவாளியாக குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
(இக்கட்டத்தில் சரத் வீரசேகர குறிக்கிட்டு ” போர்க் குற்றங்கள் இழைக்கப்படவில்லை என்று நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே இங்கே இவர் பொய் சொல்கிறார்” என்கிறார்)
ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இழைக்கப்பட்ட மிகக்கொடூரமான குற்றங்களுக்கு எந்த ஒரு நாட்டின் அதிபரோ அல்லது எந்த ஒரு நாடோ பொறுப்புக்கூறலிலிருந்து விலகி இறைமைக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.
தமிழ் மக்களே இழைக்கப்பட்ட இந்த மிகக் கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் இதற்கு பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் அவசியமானது என்றும் தமிழர் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்கள் என்று அவர் தனது உரையில் தெரிவித்தார்.