சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் சந்திப்பு

மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான மரணதண்டனைக் கைதி சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் இந்த வாரம் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அனுமதிக்கு அமைய, இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறும் வகையில், சோமரத்ன ராஜபக்ஷவிடம் தகவல்களை பதிவு செய்வதற்காக இந்த சந்திப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இழைத்த குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள், மனிதப்புதைகுழிகள் மற்றும் அவற்றுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர் விபரங்கள் உள்ளிட்ட பல்வேறு உண்மைகளையும் வெளிப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை, செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரி, சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஊடாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த விடயங்களுடன் தொடர்புடைய சில உண்மைகளையும், எதிர்வருங்காலங்களில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக உள்ள விடயங்களையும் உள்ளடக்கி 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து சோமரத்ன ராஜபக்ஷ தமது சட்டத்தரணி முன்னிலையில் சத்தியக்கடதாசி வழங்கியிருந்தார்.

அந்த சத்தியக்கடதாசியின் ஒரு பிரதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதன் இரண்டு பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் ரெக்கிடமும் (Volker truk), உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் சந்தித்தனர்.

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் 26 அல்லது 27 ஆம் திகதி மீண்டும் அவரைச் சந்திப்பதற்கு சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் அனுமதி கோரியிருந்தனர். இருப்பினும் டிட்வா சூறாவளியை அடுத்து அச்சந்திப்புக்கான அனுமதி வழங்கல் தாமதமடைந்த நிலையில், மீண்டும் இந்த வார இறுதிக்குள் சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.