ரணிலை வெற்றிபெற வைப்பதற்காக பெரமுன கட்சி வேட்பாளரை நிறுத்தாது?

ranil mahinda ரணிலை வெற்றிபெற வைப்பதற்காக பெரமுன கட்சி வேட்பாளரை நிறுத்தாது?ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ள கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழ் ரணில் விக்கிரமசிங்கவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று வெளியான அந்தப் பத்திரிகையின் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சிறீலங்கா பொது ஜன பெரமுனவின் நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிய வருகின்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த விடயங்களுக்கு அப்பால் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ புதிய நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் இன்னமும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் குறித்து தீர்மானிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 14ஆம் திகதி நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா பொதுஜனபெரமுன தனது வேட்பாளரை நிறுத்த வேண்டுமா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் முக்கியமாக தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைப்பாடு என்னவென்றால் கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாது என்பதே என விடயமறிந்த வட்டா ரங்கள் தெரிவித்தன. ரணில் விக்கிரமசிங்கவின் வாக்கு வங்கியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த யோசனை காணப்படுகின்றது.