வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் சொந்த நிலத்திலேயே அநாதைகளாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் மக்கள் இன்றும் தங்களது சொந்த நிலங்களை இழந்து தெருக்களில் நிற்கிறார்கள். உறவினர்களின் வீடுகளிலும், நண்பர்களின் காணிகளிலும் தஞ்சம் புகுந்துள்ள இம்மக்களின் துயரம் சொல்லிலடங்காததாகவுள்ளது.
ஆனால், அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டிய அரசாங்கம், நில அளவைத் திணைக்களத்தை அனுப்பி இராணுவ மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் மக்களின் நிலங்களை அளக்க முற்படுவது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் சாடினார்.
“கடந்த அரசாங்கங்கள் தான் இதைச் செய்தது என்றால், தற்போதைய அரசால் ஏன் 30 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடியவில்லை? கர்ம வினைகள் உங்களை ஒருபோதும் உருப்பட விடாது. சொந்த நிலத்தை உங்கள் கண் முன்னாலேயே அளந்து பறிக்கும்போது அந்த உரிமையாளரின் மனநிலை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடுமையாக சாடினார்.



