சிறிதரன் உடன் பதவி விலக வேண்டும் – தயாசிறி

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறுபான்மை கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன்  அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார்.

எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை தூக்கி ஆதரவு வழங்குகின்றார்.

அவர் தவறான நபர்களை பதவியில் நியமிப்பதற்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.

தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது சிறிதரன் ஆதரவு வழங்குகிறார்.  அவர் அதற்கான நியாயப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.

சூரிய மின் சக்தி வேலைத்திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு விடயத்துடன் தொடர்புப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து தற்போது ஶ்ரீதரன் சாரங்கனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சிக் கூட அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த பேரவைக்கு நியமிக்கப்பட்ட அவர், அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்கிறார்.

அது மாத்திரமல்ல அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

கணக்காய்வாளர் நியமனம், இழப்பீட்டு அலுவலகங்களுக்கான நியமனத்தில் இராணுவ பின்புலம் கொண்ட இருவரது நியமனத்திற்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வடக்கு மக்களின் வாக்கில் பாராளுமன்றம் வந்த அவர், அவர்களுக்கு எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்து எஸ்.ஶ்ரீதரன் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.