ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக கடந்த காலங்களில் செயற்பட்ட சதா என்ற சுப்பையா பொன்னையா என்பவர் அண்மையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இன்று (11) பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்தார்.
நிமலராஜன், அற்புதன், நிக்லஸ் உள்ளிட்ட பலரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி படுகொலை செய்ததாக சுப்பையா பொன்னையா அந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டதாக சிறிதரன் சபையில் சுட்டிக்காட்டினார்.
நிமலராஜன் போன்றவர்களின் கொலைகள் மூடி மறைக்கப்பட்டதாக சிறிதரன் கூறினார்.
இசைப்பிரியா, இராணுவத்தால் மிக மோசமாகப் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கொலைச் சம்பங்களுக்கு எல்லாம் நீதியான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திய சிறிதரன் அதனை இலங்கை அரசாங்கத்தால் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதியின் படி நடந்தவர்கள் எனின் ஏன் அரசாங்கம் வெளியக விசாரணைக்குத் தயாராகக் கூடாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வியெழுப்பினார்.
ஏன் வெளியக விசாரணையைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
வெளியக விசாரணையை ஏற்றுக்கொள்ளும் வரையிலும் நீதி, நல்லிணக்கம், சமாதானம் என்பது எப்போதும் ஏற்படாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார்.