பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விவகாரமானது கொழும்பு மைய அரசியலை நடத்துவதா? அல்லது தாயக மைய அரசியலை நடத்துவதா? என்ற பிரச்சினையே என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய பணிப்பாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(27) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “2010 ம் ஆண்டு சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவை இரா. சம்மந்தனே எடுத்திருந்தார். அது சம்மந்தனின் முழுப்பொறுப்பு. அதனை எடுக்க வேண்டிய சூழலை உருவாகியிருந்தது.
அன்று முதலாவது எதிரி மகிந்த ராஜபக்ச, அவரை பலவீனப்படுத்தவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த முடிவை எடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்று கஜேந்திரகுமாறும் சுரேஷ் பிரேமசந்திரனும் தமிழ் தேசிய கூட்மைப்பில் இருந்தமையால் அந்த முடிவுக்கு இணங்கி போகவேண்டியிருந்திருக்கலாம். அப்போது அந்த முடிவெடுத்தது தவறு என்பது தமது அபிப்பிராயம் என்றும் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அன்று இருந்த சூழலுக்கும் இன்று இருக்கின்ற சூழலுக்கும் வேறுபாடு உண்டு. பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னாள் இராணுவ தளபதியாக இருந்த ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஆதரவளித்ததாக ஒரு குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.
அது தொடர்பில் அவர் பொது வெளியில் எதனையும் கூறவில்லை. அவர் ஆதரவு கொடுத்திருந்தால் உண்மையில் அது தவறதுதான். அதற்காக அவரை அரசியல் அமைப்பு பேரவையிலிருந்து விலக சொல்லி கேட்பது பொருத்தமில்லை என்று சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அதனை கேட்பவர் யார் எனில் அவர் சுமந்திரன்.
சுமந்திரன் ஏற்கனவே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்பட்ட ஒருவர். திருகோணமலை புத்தர் விகாரைக்கு ஆதரவாக இருந்த சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக இருந்தவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தில் சிறிதரன் இராணுவ தளபதிக்கு வாக்களித்திருந்தால் அது தொடர்பான காரணத்தை மக்களுக்கு சொல்லவேண்டும் என்றும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய பணிப்பாளருமான சி.அ.யோதிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.



