சிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்

641 Views

ஆகஸ்ட் 5 ஆம் திகதிய தேர்தல் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகவே தெரிகின்றன. ஆட்சி மாற்றம் மாத்திரமல்ல. ஆட்சி முறைமையிலும் பல மாற்றங்களுக்கு அது வித்திடும் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. தேர்தலுக்கு முந்திய நிலையில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளும் பலரும் வெளியிடுகின்ற கருத்துக்களும் இவற்றுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

தேசிய மட்டத்திலான இந்த மாற்றங்களுக்கு தமிழ் அரசியல் எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது என்பதையும் இந்தத் தேர்தலே தீர்மானிக்கப் போகின்றது. அதற்குத் தமிழ் மக்களும், தமிழ்த் தரப்பு வேட்பாளர்களும் ஆயத்தமாக இருக்கின்றார்களா? அதற்குத் தயாராகுவார்களா? தயாராகின்றார்களா? – என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.

தேசிய மட்டத்தில் வலுவானதோர் எதிர்த்தரப்பு தேர்தல் களத்தில் இல்லாத நிலையில், பொதுஜன பெரமுன மூன்றிலிரண்டு பெரும்பான்மை வெற்றியை நோக்கிக் காத்திருக்கின்றது. அந்த வெற்றிக் கனவில் அது ஆழ்ந்து கிடக்கின்றது என்றுகூட கூறலாம். அந்தக் கனவு சாத்தியமா, இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் ஆட்சி மாற்றம் என்பது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு நிலைமையாகவே காணப்படுகின்றது.

சிங்கள பௌத்த தேசியத்தை, சிங்கள பௌத்த, இராணுவ தேசியமாக இந்தத் தேர்தலில் பரிணமிக்கச் செய்வதற்கான முயற்சிகளில் பொதுஜன பெரமுன துணிந்து இறங்கி இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்கு வங்கியை மாத்திரமே ஆதாரமாகக் கொண்டு பொதுஜன பெரமுன வெற்றியீட்டியது. – கோத்தாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகினார். அதே வழித்தடத்தில் சிங்கள பௌத்த இராணுவ தேசியம் என்ற புதிய பரிமாணத்தில் பயணிப்பதற்கு இந்தத் தேர்தலைக் களமாகப் பயன்படுத்துவதற்கு அது ஆயத்தமாகி இருக்கின்றது.

இந்தப் பத்திகளில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, சோசலிஸ ஜனநாயகக் குடியரசாகிய இந்த நாட்டை சோசலிஸ இராணுவ ஜனநாயகக் குடியரசாக மாற்றுவதே பொதுஜன பெரமுனவின் அரசியல் இலக்கு. அதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஏற்கனவே படிப்படியாக முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் காண முடிகின்றது.

தேர்தல் காலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு வாக்குகளை சுவீகரிக்க முடியுமோ அதற்கான முயற்சிகளை வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் முன்னெடுப்பதே வழமை. ஆனால் இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் அனைவரினதும் பெரும்பான்மையான வாக்குகளுக்குப் பதிலாக பொதுஜன பெரமுன சிங்கள பௌத்த வாக்குகளையும், இராணுவசார்பு வாக்குகளையுமே இலக்கு வைத்திருக்கின்றது.

இந்த நாடு பல இன மக்களையும் பல மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு என்பதைப் புறந்தள்ளி பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களே சக்தி வாய்ந்தவர்கள், அவர்களே கிங் மேக்கர்ஸ் என்பதை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண தொல்லியல் பராமரிப்புக்கான சிங்கள பௌத்தர்களை மட்டுமே கொண்ட செயலணி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நல்லொழுக்கமும் பண்பாட்டையும் கொண்ட குடிமக்களை உருவாக்குவதற்கான இராணுவ செயலணி என்பன இந்த நோக்கத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன.

முயற்சிக்கான உற்சாகமும் தூண்டுதலும்

ஏனெனில் இந்த செயலணிகளை இப்போது உருவாக்குவதற்கான அவசியமும் அவசரமான சூழலும்  காணப்படவில்லை. அந்த நிலையில் தேர்தல் ஒன்றை எதிர்கொண்டுள்ள ஓர் அரசியல் சூழலில்தான் இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது முக்கியமாகக் கவனத்திற் கொள்ளத் தக்கது. குறிப்பாக இந்த இரண்டு செயலணிகளுமே பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய கமால் குணரட்னவைத் தலைவராகக் கொண்டிருக்கின்றன.

எதிர்காலத்தில் நாளாவிய ரீதியில் சிங்கள பௌத்தத்தினதும், இராணுவத்தினதும் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதே இந்த செயலணிகள் உருவாக்கப்பட்டதன் உள்நோக்கமாகத் தெரிகின்றது. குறிப்பாகக் கூறுவதென்றால், சிங்கள பௌத்த, இராணுவமயமான ஒரு நாட்டை உருவாக்குவதே அடிப்படை இலக்கு. EYq2GN1XkAU8Ypl சிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்

நாட்டின் தலைவராகிய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றார். ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாகிய நிறைவேற்று அதிகாரம் திகழ்கின்றது. அது ஏனைய தூண்களாகிய சட்டவாக்கம், நீதித்துறை என்பவற்றின் செயற்பாடுகளில் தலையிட முடியாது என்ற வரைவிலக்கணத்தைக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் 2019 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இரண்டு முக்கிய நிலைமைகள் நிறைவேற்று அதிகாரத்தின் கையை வரையறைகளைக் கடந்த நிலையில் மேலோங்கச் செய்திருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த சூட்டோடு சூடாகப் பொதுத்தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்றக் கலைப்பும், அதேவேளை சர்வதேச அளவில் பரவி பேரச்சத்தை உருவாக்கிய கொரோனா வைரஸின் பேரிடர் நிலைமையும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கான வாய்ப்பாக அமைந்தன.

நாடாளுமன்றம் செயலிழந்திருப்பது, எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாகப் பலமின்றி இருப்பது என்பனவும் காபந்து அரசாங்கத்தின் தலைவராகிய ஜனாதிபதி சுயஅரசியல் நலன் சார்ந்த போக்கில் செயற்படுவதற்கு வழியேற்படுத்தி இருக்கின்றன.

யுத்தத்தில் வெற்றிபெற்று அரசியல் களத்தில் சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றிருந்த ராஜபக்ஷக்கள் 2015 தேர்தல்களில் அடைந்த தோல்வியை ஈடு செய்து நீண்ட காலத்திற்கு அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முயற்சிக்கு ஸ்திரமற்ற அரசியல் நிலைமைக்குள் நாட்டை இட்டுச் சென்ற மைத்திரி – ரணில் தலைமையிலான முன்னைய கூட்டு அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் 2015 ஆம் ஆண்டு உருவாகியிருந்த தேநிலவு குலைந்ததும், அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தலையெடுத்துள்ள அதிகாரப் போட்டியினால் ஏற்பட்டுள்ள கட்டுக்குலைவும் ராஜபக்ஷக்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

தமிழர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில் – குறிப்பாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் ராஜபக்ஷக்கள் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். யுத்தத்தில் விடுதலைப்புலிகளை வென்றதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அரசியல் ரீதியான அங்கீகாரம் மற்றும் ஆதரவு என்பன அவர்களை அதிகாரத்தின் உச்சத்தை நோக்கிய அரசியல் பயணத்தை முடிவின்றி தொடர்வதற்கே தூண்டியிருக்கின்றன.

சிந்தனையும் விழிப்புணர்வும்

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்டதையடுத்து, தமிழ் மக்களை அரவணைத்துக் கொண்டு பன்மைத்தன்மை கொண்டதோர் அரசியல் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. மாறாக ஒரே இனம், ஒரே மதம் என்ற ஒற்றை அரசியல் கோட்பாட்டின் கீழ் நாட்டைக் கொண்டு வருவதற்கான வழிமுறையையே அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இத்தகைய நிலைமையில் பொதுத்தேர்தலுக்குப் பின்னரான நாட்டின் நிலைமைகள் பன்மைதன்மை கொண்டதோர் அரசியல் கலாசாரத்திற்குப் பிரகாசமாகத் தோன்றவில்லை. சிங்கள பௌத்த இராணுவமயமான ஓர் அரசியல் நிலைமைக்குள்ளேயே நாடு இட்டுச் செல்லப்படும் என்று தெரிகின்றது. இத்தகைய ஒரு நிலைமை குறித்து தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி நாட்டின் எதிரணியினராகிய அரசியல் தலைவர்களும் எதிர்வு கூறியிருக்கின்றனர். நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

இத்தகைய எதிர்கால நிலைமை, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு சாதகமானதாக அமையமாட்டாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது சாதகமற்ற நிலைமை மட்டுமல்ல. சிறுபான்மை இன சமூகங்களுக்கு அரசியல் ரீதியான ஆபத்தானதும்கூட.

தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளும், இவ்விரு சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இந்த நிலைமையின் தீவிரத் தன்மையை உணர்ந்திருக்கின்றார்களா என்பது கேள்விக்கு உரியதாகவே இருக்கின்றது. ஏனெனில் அரசியல் நிலைமைகளைக் கடந்து இரு சமூகங்களினதும் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கப் போகின்ற நிலைமை குறித்து அவர்கள் அவதானிப்பும், அக்கறையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தேசிய ரீதியில் பெரியதோர் அலையாக உருவாகிக் கொண்டிருக்கின்ற நிலைமை குறித்து சமூக நிலையில் அவர்கள் ஒன்றிணைந்து சிந்திக்கவுமில்லை. அந்த நிலைமை குறித்த கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் தெரியவில்லை.GotaWithArmy சிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்

தமிழ், முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் வரப்போகின்ற தேர்தலில் தங்களுக்கிடையிலான போட்டியில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்கின்றார்கள். இதற்காக எதிரணியினர் மீது சேறடிப்பதையே தேர்தல் கால அரசியலாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும், தேர்தலுக்குப் பின்னரான உடனடி மற்றும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்தும் தமிழ்த்தரப்பினர் கட்சி வேறுபாடுகள், அரசியல் நல வேறுபாடுகளைக் கடந்து தங்களுக்குள் கலந்துரையாட வேண்டிய தருணம் இது. அதேபோன்று முஸ்லிம் தரப்பினரும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கடந்து நிலைமைகள் குறித்து இந்தத் தருணத்தில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அத்தகைய அரசியல் மட்டத்திலான கலந்துரையாடல்களின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களை விழிப்படையச் செய்ய வேண்டியதும் அவசியம்.

ஆனால் இப்போதுள்ள நிலைமை என்னவெனில் அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் விழிப்புணர்வு பெறாதவர்களாகவும் அடுத்து வரவுள்ள நிலைமைகள் குறித்து ஒன்றிணைந்து சிந்திக்காதவர்களாகவுமே காணப்படுகின்றார்கள்.

கண்டனக் கணைகளும் அச்ச உணர்வும்

ஒற்றை ஆட்சியை ஆணிவேராகக் கொண்டுள்ள நாட்டின் அரசியல் போக்கில் சிறுபான்மை இன மக்களுடைய சமூக நலன்களும் அரசியல் உரிமைகளும் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு வந்துள்ளன. இந்த அடக்குமுறை படிப்படியாக வளர்ச்சியடைந்து மதரீதியான அடக்குமுறையாகவும் ஆக்கிரமிப்பாகவும் மாறியிருக்கின்றது. அத்துடன் இனவாதமும், மதவாதமும் தேசிய அரசியலின் அச்சாணியாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதனால் இங்கு பன்முகத்தன்மையும் பல்லின மக்கள், பல மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற நிலை என்பது அரசியல் ரீதியாக அற்றுப் போகச் செய்யப்படுகின்றது.

இன ரீதியாகவும் மதரீதியாகவும் சிறுபான்மை இன மக்கள் அடக்கப்படுகின்ற அதேவேளை, ஆட்சி அதிகார வலுவைப் பயன்படுத்தி அந்த மக்களின் மனங்களை வென்றெடுப்பது போன்ற போலியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆட்சியாளர்களும் எதிரணியினரும் வல்லவர்களாகத் திகழ்கின்றார்கள். அவர்களின் பசுத்தோல் போர்த்திய செயற்பாடுகளில் சிறுபான்மை இன அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இலகுவாகப் பலியாகிப் போவதே நாட்டின் அரசியல் வரலாறாகப் பதிவாகி உள்ளது.

இந்த அரசியல்  நாடகங்கள் தேர்தல் காலங்களில் மிக அதிகமாக அரங்கேறுவதுண்டு. இந்தத் தேர்தலிலும் அத்தகைய நாடகங்களின் அம்சங்களாகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட பிரதமருடைய பேச்சுக்களும், அறிக்கைகளும் அமைந்திருக்கின்றன.

மறுபுறத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமல்ல. பிரபாகரனின் அந்தப் பிரகடனத்தைத் தூக்கிப் பிடிக்காதீர் என்று தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் கிழக்கு மாகாண தொல்லியல் பிரதேச பராமரிப்புக்கான செயலணியின் உறுப்பினராகிய எல்லாவல மெதானந்த தேரர் அறிவுரை கூறும் அளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன.

 

கிழக்கு மாகாணத்தை பௌத்த மத ரீதியாக ஆக்கிரமிப்பதற்காகவே இந்தத் தேரரை உறுப்பினராகக் கொண்ட சிங்கள பௌத்த செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனை அவருடைய கூற்று உறுதிப்படுத்தி உள்ளது. இந்த செயலணியின் உருவாக்கத்தினால் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமையை, எல்லாவல மேதானந்த தேரர் உடைய கருத்து அதிகரிக்கச் செய்திருக்கின்றது. அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.Ellawala medananda சிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்

இதேபோன்று, ‘வடக்கில் இராணுவ முகாம்கள் இருக்கின்றன. அவற்றைப் பலமான முகாம்களாக மாற்றவே முயற்சிப்போம். இராணுவ இயல்பும் அதுவாகவே இருக்கும். யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்கள் என்றும், யுத்தமோதல்கள் இப்போது இல்லை என்ற கதையெல்லாம் எமக்குத் தேவையில்லை’ என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். அதேவேளை வலிந்து ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றும் விடுதலைப்புலிகளே பலரைக் கொன்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய கூற்று தமிழ் அரசியல் தலைவர்களிடம் இருந்தும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களிடமிருந்தும் கண்டனக் கணைகளை எழுப்பியிருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலைமையையும் தோற்றுவித்துள்ளது.

‘கீழ்த்தர அரசியல் கைவிடப்பட வேண்டும்’

இனங்களுக்கிடையில் பதட்டத்தையும் பீதியையும் உருவாக்கி, உடனடியாக பெரும்பான்மை இன மக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைக் கவர்ந்து கொள்வதே பேரின அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரோபாயமாகும். இதில் ராஜபக்ஷக்கள் வல்லவர்கள். அந்த வல்லமையைப் பல தடவைகளில் அவர்கள் நிரூபித்துள்ளார்கள். அந்த வகையிலேயே வரப்போகின்ற பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பல்வேறு கருத்துக்களும் அரச தரப்பைச் சார்ந்த பலராலும் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு சிறுபான்மை இன மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற நிலைமைகள் குறித்த அறிகுறிகள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற தருணத்தில் அந்த மக்களின் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் சுயஅரசியல் இலாபத்தையும் சுய அரசியல் அதிகாரத்தையும் இலக்காகக் கொண்ட அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதையே காண முடிகின்றது.sambandhan 1561952052 சிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்

சிறுபான்மை தேசிய இன மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் தங்களுக்குள் ஒன்றிணைந்த இறுக்கமான நிறுவன ரீதியானதோர் அரசியல் கட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவை யுத்தம் முடிவடைந்த நாள் முதலாகவே ஏற்பட்டிருந்தது. அந்தத் தேவை குறித்து தமிழர் அரசியல் தலைமைகளும், அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் சமூக முக்கியஸ்தர்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

நாளடைவில் பல்வேறு சந்தர்ப்பங்களும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கட்டாயமான நிலைமைகளும், தேர்தல் காலங்களும், இந்தத் தேவை தவிர்க்க முடியாதது என்பதை வலியுறுத்தி இருந்தன. ஆனாலும் அரசியல் ரீதியான அந்த ஒன்றிணைவுக்கு அவர்கள் தயாராகவே இல்லைcm 200918 perikainews சிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்மாறாக மேலும் மேலும் புதிய புதிய அரசியல் கட்சிகளும் அமைப்புக்களுமே உருவாகின. உருவாக்கப்பட்டன. மாற்றுத்தலைமை என்ற தேவை உணர்வும்கூட, மக்களுடைய நம்பிக்கையை வென்றெடுக்கத் தக்க வகையிலான அரசியல் கட்டமைப்பை உருவாக்கத் தவறிவிட்டது.

ஜனாதிபதி தேர்தல் மூலமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பொதுத் தேர்தலின் ஊடாக முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படப் போகின்ற இப்போதைய சூழலில் ஆளுமை மிக்கதோர் அரசியல் தலைமை அவசியமாகி உள்ளது. ஆனால் அந்த அவசியம் அபிவிருத்தி சார்ந்த அரசியல் என்ற போர்வையில் மறைக்கப்படுகின்றது. மறைக்கப்பட்டிருக்கின்றது.

அபிவிருத்திக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதா?  அல்லது அபிவிருத்தியையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதையும் இணைத்துக் கொண்டு நடத்தவல்ல ஆளுமையும் தீர்க்கதரிசனமும் கொண்ட செயல்வல்லமையுள்ள தலைவர்களைத் தெரிவு செய்வதா என்பதே இப்போது தமிழ் மக்கள் முன்னால் உள்ள தேர்தல் கால கேள்வியாகும்.kajenthirakumar 1 சிங்கள பௌத்த இராணுவமய அரசியலும் சிறுபான்மை இன மக்களும்-பி.மாணிக்கவாசகம்

ஆனால் இந்தத் தேர்தல் கால நிலைமையானது, வேறு விதமாக உள்ளது என்று தமிழ் மக்கள் பேரவை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளது. அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை அந்த அறிக்கை வலியுறுத்தி இருக்கின்றது.

‘ஒவ்வொருவரும் மற்றவரிலே சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை விடுத்து தமது நிலைப்பாடுகளையும் திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைப்பதிலே தமது சக்தியை செலவிடுவார்களானால் அது ஆரோக்கியமானதாக அமையும். நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலிலே மக்கள் முன் பல போதுமானளவு தெரிவுகள் இருக்கின்றன. எமது மக்கள் ஏனையவர்களுடன் ஒப்பிடும் பொழுது தெளிவான அரசியல் பார்வை கொண்டவர்கள். அவர்களால் சரியான தெரிவுகளை அடையாளப்படுத்த முடியும்’ என்று தமிழ் மக்கள் பேரவை கூறியிருக்கின்றது.

இதனை அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல வேட்பாளர்களுடன் இணைந்து தமிழ் மக்களும் கவனத்திற் கொள்ள வேண்டும். செய்வார்களா?

Leave a Reply