சிங்கள  மற்றும் பௌத்த மயமாக்கலே கடந்த காலங்களில் போராட்டங்கள் வெடிக்க காரணம்-மட்டு.நகரான்

281 Views

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சிங்கள மயமாக்கல் மற்றும் பௌத்த மயமாக்கலே தமிழ் மக்கள் மத்தியிலிருந்து போராட்டத்திற்கான களங்கள் திறக்கப்பட்டன.

இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுவந்த பௌத்த மயமாக்கல் நிகழச்சியே தமிழர்களை அகிம்சை ரீதியாகவும் ஆயுதம் தாங்கியும் போராடவேண்டிய நிலைக்கு தள்ளியது.

ஒரு பல்லினம் வாழும் நாட்டில் அந்ததந்த இனங்களின் கலாசாரங்களும் கலாசார பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களும் பாதுகாக்கப்பட்டு அதன் எதிர்கால சமூகத்திற்கு வழங்கவேண்டிய உரிமை அந்தந்த சமூகத்திற்கு உள்ளது. அவ்வாறு இல்லாமல் ஒரு இனத்தின் ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களும் கலாசாரத்தினையும் அவர்களின் வரலாற்றினையும் அழித்து அந்த நாட்டில் அந்த இனத்தினை அடிமைகளாக மாற்றுவதற்கு ஒருசமூகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளே அந்த சமூகத்தினை போராட்ட நிலைக்கு கொண்டுசெல்கின்றது.

இந்த செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கும்போது இந்த நாட்டில் நாங்கள் பிரிந்து நின்று எங்களது தனித்துவத்தினை பாதுகாக்கவேண்டியது எங்கள் உரிமை என்பதை ஒரு இனம் தீர்மானிக்கும் நிலையினை ஏற்படுத்துகின்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த பௌத்தமயமாக்கலும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் வரலாறுகளை திரிவுபடுத்தி அழிக்கும் முயற்சிகளும் தமிழர்கள் பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் செயலணி உருவாக்கத்தின் மூலம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் என்பது திரைமறைவில் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுவது தற்போது பல்வேறு இடங்களிலும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியின் தலை நகராக கருதப்படும் திருகோணமலையினை கடந்த காலங்களில் பௌத்தமயமாக்கல் மூலம் தமிழர்களின் தனித்துவத்தினை சிதைப்பதற்கு பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது இலங்கை தமிழர்களின் வரலாற்று பொக்கிசமாகயிருக்கின்ற திருக்கோணேஸ்வரத்தினை பௌத்தமயமாக்க திட்டங்களை சிங்கள தேசம் தீட்டிவருகின்றதுடன் அதற்கான நடவடிக்கைகளை கடந்தகாலத்தில் ஆரம்பித்திருந்தாலும் இன்று அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றது.

கிழக்கினைப்பொறுத்த வரையில் இதுவரையில் தொல்பொருள் செயலணி என்ற போர்வையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிவைக்கப்பட்ட நிலையிலும் திருகோணமலையில் திருக்கோணேஸ்வரம் உட்பட பல பகுதிகள் இன்று சிங்கள பௌத்த மயமாக்கலை முன்னெடுப்பதற்காக தொல்;பொருள் திணைக்களம் என்ற திணைக்களத்தினை அரசாங்கம் முழுமையாக பயன்படுத்துதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் கிழக்கு மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டதே இவ்வாறான பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் திணைக்களமும் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களம் போன்றவை இணைந்து மிககச்சிதமான செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

திருக்கோணேஸ்வரமும் என்பது கி.மு.பல நூற்றாண்டு வரலாறுகளைக்கொண்டதும் இந்தியாவின் சமய குரவர்களினால் பாடல்பெற்ற தலமாகும்.அதனை பௌத்தமயமாக்க வேண்டிய தேவை இன்று என்ன சிங்கள தேசத்திற்கு ஏற்பட்டுள்ளது என்பதை தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும்.

குறிப்பாக திருகோணேஸ்வரப்பகுதியை புனித பூமி பகுதியாக அறிவிக்குமாறு சுமார் 50வருடங்களுக்கு முன்னரே தமிழர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.அதன் காரணமாக அன்றைய காலத்தில் அரசாங்கத்தின் பக்கத்திலிருந்த தமிழ் அமைச்சர் ஒருவரும் தனது அமைச்சு பதவியை துறந்துவெளியேறிய சம்பங்களும் நடைபெற்றன.

“16.01.1981ல் வெளியான 124ம் இலக்க தொல்;பொருள் சட்டத்தின் கீழ் கோயில் அடங்கிய 372 ஏக்கர் நிலப்பகுதி தொல்பொருள் ஆய்வுப் பகுதியாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளது” என அச்செய்தி கூறுகிறது.

இச்சட்டம் வர்த்தமானியில் வெளியாகு முன்னர், இலங்கை நிலஅளவை நாயகம் சார்பாக 03.09.1976ஆம் திகதியில் வெளியிடப்பட்ட கோணேசர் ஆலயம் சம்பந்தப்பட்ட நில அளவை வரைவுப் படத்தின் பிரதி அடிப்படையில்  அதில், ஆலயத்திற்கென மொத்தமாகவுள்ள 378 ஏக்கர் நிலப்பரப்பில் – கோணேசர் கோயில், அருள்மலை, அதைச் சுற்றியுள்ள தோட்டம், தொலைத்தொடர்புக் கம்பம் அமைந்திருக்கும் மலை அடங்கிய 18 ஏக்கர் 1 றூட் 03 பேர்ச்சேஸ் இடமும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள பகுதியில் இரண்டு கிணறுகள், அருகேயுள்ள 3 கட்டிடங்கள், 1 சீமெந்து தளம் ஆகியவை அடங்கிய 3 ஏக்கர் 2 றூட் 1 பேச்சர்ஸ் இடமும் தவிர்ந்த ஏனையவகைகளை தொல்லியன் திணைக்களத்திற்கு வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது.

எனினும் இதனை அனைத்தையும் மீறி அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துவருகின்றனர்.

குறிப்பாக திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் ஆலயத்திற்கு அருகில் சுமார் 60க்கு மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு சிங்களவர்களினால் வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த சிங்களவர்கள் 1997ஆம் ஆண்டுகாலப்பகுதியில் மாத்தறை பகுதியிலிருந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகயிருந்த புஞ்சிநிலமே அவர்களினால் தனது அரசியல் பரப்புரைகளுக்காக கொண்டுவரப்பட்டவர்கள் என்பதுடன் அவர்களுக்கு இப்பகுதியில் தற்காலிக கொட்டகைகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டது.இன்று குறித்த 60பேருக்கும் அப்பகுதியில் நிரந்தர கடைகளை அமைப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுனர் நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றார்.

ஆனால் திருகோணேஸ்வரர் ஆலயத்தில் எந்தவித கட்டுமானப்பணிகளையும் முன்னெடுக்கவிடாமல் தொடர்ச்சியாக முட்டுக்கட்டையினைபோட்டுவரும் தொல்லியல் திணைக்களம் சிங்களவர்களுக்கு கடைகளை அமைத்துக்கொடுப்பதற்கு ஆர்வத்துடன் செயற்படுகின்றது.

குறித்த கடைகள் வீடுகளுடன் இணைந்ததாக அமைக்கப்பட்டு அப்பகுதியில் சிங்களவர்களை நிரந்தரமாக குடியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முனையும் நிலையில் திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகம் மற்றும் சமய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் இந்த விடயம் தொடர்பில் வடகிழக்கில் உள்ள தமிழ் தேசிய சக்திகள் மௌனம் காத்துவருவதே மிகவும் கவலைக்குரிய விடயமாகவுள்ளது.இதைவைத்து வெறுமனே அரசியல் ரீதியான பரப்புரைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றதே தவிர இது தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் அவ்வாறான செயற்பாடுகள் வீரியமற்ற நிலையிலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

கிழக்கில் கோணேஸ்வரர் ஆலயம் மட்டுமல்ல மட்டக்களப்பில் குடும்பிமலை,குசனார்மலை,தாந்தாமலை,வேலோடும்மலை உட்பட பல வரலாற்றுரீதியான தமிழர்களின் மிகவும் பழமையான அடையாளங்கள் இனங்காணப்பட்ட பகுதிகளிலும் தொல்லியல் திணைக்களமும் பௌத்த தேரர்களும் இணைந்து பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கடந்தகாலத்தில் முன்னெடுத்தபோதும் அதற்கு எதிரான குரல்கள் எழுந்த நிலையில் அவை இடைநிறுத்தப்பட்டன.அவை தற்காலிக இடைநிறுத்தமே தவிர நிரந்தர இடைநிறுத்தம் இல்லை.

இன்று கோணேஸ்வரத்தையே இல்லாமல்செய்ய அல்லது பௌத்தமயப்படுத்த முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் கிழக்கில் பாரியளல் முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகளவில் காணப்படுவதன் காரணமாக இதனை தடுத்துநிறுத்தி கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுடங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்கு உள்ளது.

ஆனால் அதற்குரிய போராட்டங்கள் வடகிழக்கு இணைந்ததாக முன்னெடுக்கப்படவேண்டும்.வடகிழக்கில் தமிழர்களின் பலமான எதிர்ப்புகள் ஏற்படும்போதே இவ்வாறான பௌத்தமயமாக்கல்கள் நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் ஏற்படுத்தப்படும்.இதனை உடனடியாக ஆரம்பிக்கவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. இதனை விரைவில் முன்னெடுக்க அனைவரும்  கைகோர்க்கமுன்வரவேண்டும்.

Leave a Reply