இலங்கையில் தொடரும் துப்பாக்கி சூடு – 3 நாட்களில் 8 பேர் பலி

இலங்கையில் கடந்த 3 நாட்களில் இடம்பெற்ற வெவ்வேறு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரும் அடங்குகின்றனர்.

இதன்படி, கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சசிகுமார் என்ற 38 வயதான ஒருவர் உயிரிழந்தார். அவர் மீது துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற நிலையில் கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர்கள் இருவரும் விசாரணைகளுக்காக காக்கைத்தீவு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்ட போது அங்கு பொலிஸாரின் மீது துப்பாக்கி சூடு நடத்த முற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்தனர்.
அத்துடன் இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜா-எல பகுதியில் உள்ள கடற்கரையில் இருந்து துப்பாக்கி சூட்டு இலக்காகி உயிரிழந்த போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
குறித்த நபர் மீது 10 தடவைகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 10 வெற்று தோட்டக்களும் மீட்கப்பட்டன.

இதேவேளை, கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மித்தெனிய பகுதியில் மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 39 வயதான நபரும், அவரது 6 வயது மகளும் 9 மகனும் உயிரிழந்தனர்.
அத்துடன் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றுக்கும் போதைப் பொருள் வர்த்தகரான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.