உலகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர் என சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.
உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் அர்த்தபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் மேலும் கூறுகையில்,
பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளினால் பொதுவாக மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றனர்.
பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், பேரழிவு தரும் மற்றும் நீண்ட கால பாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த விளைவுகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்துக்கும் வழிவகுக்கும்.
பொதுவாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், அதிகார கட்டமைப்பாட்டுக்கள், சமய சம்பிரதாய நம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்கள் இவ்வாறானவை வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.
சமூகத்தில் பாதிப்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
உலகளவில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை தொடர்பான சில முக்கிய தரவுகள் குறிப்பிடவேண்டும் என்றார்.



