மனித பேரவலத்தின் சாட்சியங்களாக, சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ள யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நாளையுடன் (06) நிறைவடையவுள்ளன.
மனித புதைகுழி அகழ்விற்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாட்கள் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையுவுள்ள நிலையில், இன்றும் (05) மனித என்புகூடுகளைத் தேடி அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில், சித்துப்பாத்தி வளாகத்தில் ஜி.பி.ஆர் ஸ்கேனர் ஊடாக அடையாப்படுத்தப்பட்ட பகுதிகளில், அகழ்வுகளை மேற்கொள்வதற்கு மேலும் 08 வாரங்கள் கால அவகாசம் தேவை என முன்னதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், குறித்த அகழ்வை மேற்கொள்வதற்கான பாதீட்டை சமர்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்ட பாதீடு ஓரிரு தினங்களில் நீதிமன்றத்திற்கு சமர்பிக்கப்படும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்று (05) மேலும் 5 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதன்படி இதுவரை மொத்தமாத 240 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேநேரம், செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் (04) பின்னிப்பிணைந்த நிலையில் 8 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (05) முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.