நேரமுகாமைத்துவத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின், கடற்புலிகளின் தளபதியாக இருந்த சூசை தமக்கு முன்னோடி எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அதனால் தற்போதும் தம்மால் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தைப் பின்பற்ற முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு – மாமடு கற்பகா அறநெறிப்பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினநிகழ்வுடன், சாதனையாளர் மதிப்பளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், சிறார்களுக்கு நேரமுகாமைத்துவம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சர்வதேச ரீதியாக சிறுவர்தினம் மற்றும் முதியோர்தினம் என உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டுவருகின்றது. இந்நிலையில் குறித்த நிகழ்வுகளை இந்தக் கிராமத்தில் ஒழுங்குசெய்து சிறார்கள் மற்றும் முதியவர்களை அழைத்து மதிப்பளிப்பது உண்மையிலே ஒரு சிறப்பான விடயம். அதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சாதனையாளர்களும் மதிக்களிக்கப்படுகின்றனர்.
அந்தவகையிலே எமது வாழ்வில் நேர முகாமைத்துவம் என்பது மிக மிக முக்கியமானது என்பதை சிறார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்றொழிலாளர் சமாசத்தின் தலைவராக நான் பத்துவருடங்கள் இருந்தேன்.
அந்தக் காலப்பகுதியில் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள் எமக்கு நேரமுகாமைத்துவத்தில் முன்னோடியாக இருந்தார். அந்தவகையில் தற்போதும் எம்மால் மிகச் சிறப்பாக பின்பற்ற முடிகின்றது.
இவ்வாறாக நேரமுகாமைத்துவம் உட்பட அனைத்துப் பண்புகளையும் பின்பற்றிக்கொண்டு சிறார்கள் அனைவரும் எதிர்காலத்தில் உயர்ந்தநிலையை அடையவேண்டும்.
எமது பிள்ளைகள் அனைவரும் சிறப்பான முறையில் கற்றல்செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். தற்போது எமது மாவட்டம் கல்வியில் 25ஆவது மாவட்டமாகக் காணப்படுகின்றது. ஆனால் வறுமையில் முதல்நிலையிலுள்ள மாவட்டமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருக்கின்றேன். எமது மாவட்டங்களுக்கு கல்விக்கான வளப்பற்றாக்குறைகளைப் பூர்த்திசெய்யுமாறு உரியவர்களைக் கோரியிருக்கின்றேன்.
இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மாத்திரம்தான் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த குளிரூட்ட சொகுசு பேருந்து சேவையை விரைந்து ஆரம்பிக்குமாறு உரிய அமைச்சிடம் கோரியிருக்கின்றேன். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு சொகுசுப் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேபோல் வட்டுவாகல் பாலத்தினை அமைக்குமாறு தொடர்ச்சியாக கோரியதற்கு அமைவாக அந்தப் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தினை அமைத்துத்தருமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன்.
எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப்பாலத்தினை அமைத்துத்தருவதாக ஜனாதிபதி என்னிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறாக எமது மக்களின் கோரிக்கைகளையே நாம் உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று நிறைவேற்றுக்கின்ற செயற்பாட்டையே மேற்கொண்டுவருகின்றோம்.
இந்நிலையில் பின்தங்கியுள்ள எமது முல்லைத்தீவு மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே நாம் முன்கொண்டுசெல்லமுடியும்.
எனவே சிறுவர்கள் அனைவரும் நல் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். தற்போது எமது சமூகங்களில் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் இடம்பெற்றுவருகின்றன.
குறிப்பாக போதைப்பொருள் ஊடுருவல்களும் அவற்றால் ஏற்படும் சீர்கேடுகளும் மிகப் பாரிய அளவில் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துமாறு தொடர்சியாகக் கோரிவருகின்றோம்.
அந்தவகையில் அனைத்து வகையான சீர்கேடுகளும் கட்டுப்படுத்தப்படுமென உரியவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இந்நிலையில் இவ்வாறான சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென நம்புகின்றோம்.
அத்தோடு நிச்சயமாக எமது மாவட்டத்தை கல்வியால் மாத்திரமே உயர்த்த முடியும். நாம் தற்போது வெளிமாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தரை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்தநிலை மாறவேண்டும். முல்லைத்தீவை முல்லைத்தீவு பிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும்.
வவுனியாவினை வவுனியாபிள்ளைகள் ஆட்சிசெய்யவேண்டும். மன்னாரிலும் அந்த நிலை ஏற்படுத்தப்படவேண்டும். ஆட்சிசெய்வதென்றால் அரசியல் ரீதியாக ஆட்சிசெய்வதை நான் இங்கு குறிப்பிடவில்லை.
சிறார்கள் அனைவரும் நல்லமுறையில் கல்விகற்று அந்தந்த மாவட்டங்களில் திணைக்களங்களிலுள்ள வெற்றிடங்களை தாமே நிரப்பக்கூடிய நிலையை ஏற்படுத்தவேண்டுமென்பதையே தெரிவிக்கின்றேன். இந்தநிலை ஏற்பட்டால் வன்னியும், முல்லைத்தீவும் தன்னிறைவுபெறும் என்றார்.