திருகோணமலை கடற்பரப்பில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தமது படகுகளை கரையோரத்தில் இருந்து வீதிக்கு அப்பறப்படுத்தி வருகின்றார்கள்.
திருகோணமலை வீரநகர் உள்ளிட்ட கரையோரப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துள்ளதோடு தமது படகுகளை பாதுகாப்பு கருதி வீதியோரங்களுக்கு அப்புறப்படுத்தியும் வருகின்றார்கள்.
தமது படகுகளை பாதுகாப்பா வைத்திருப்பதற்கு தமக்கு இடம் இல்லை எனவும் இதனால் வீதிக்கு கொண்டு வரவேண்டி இருப்பதாகவும், எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னர் கடல் அலையைப் பார்த்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
இதேவேளை, வீரநகர் பகுதியில் கடலரிப்பு காரணமாக இதுவரை 4 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மீனவ சங்க கட்டிடமும் அபாய நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பாக அண்மையில் கள விஜயம் மேற்கொண்டிருந்த பிரதியமைச்சர் அருண், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் குறித்த பகுதியில் கடலரிப்பை தடுப்பதற்காக கற்களை போடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றிருந்தனர்.




