நவீன பிரபாகரன்களிடம் இருந்து புத்தர் சிலையைப் பாதுகாக்கப் போராடுவதாக சரத் வீரசேகர தெரிவிப்பு

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தற்போதைய அரசாங்கம் மற்றும் அரச திணைக்களங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“அன்று பிரபாகரனிடம் இருந்து புத்தர் சிலைகளைப் பாதுகாக்கப் போராடினோம். இன்று நவீன பிரபாகரன்களாகச் செயற்படும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கும் அரசாங்கத்திடம் இருந்து சிலையைப் பாதுகாக்கப் போராட வேண்டியுள்ளது” என அவர் சாடினார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகப் பௌத்த மதத்தையும், மகா சங்கத்தினரையும் அவமதித்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

பௌத்த பிக்குகள் கைது செய்யப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று பொங்கல் விழாவில் பங்கேற்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்லும் பௌத்தர்களை இனவாதிகள் எனக் கூறி ஜனாதிபதி அவமதிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையைப் பார்வையிடுவதற்காகப் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் திருகோணமலைக்கு வருகை தந்திருந்தனர்:

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சை உருவானது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, திருகோணமலை கடற்கரைப் பகுதியில் அனுமதி இன்றி புத்தர் சிலை ஒன்றை நிறுவ முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 10 பேரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் இன்று (19) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவர்களில் நான்கு பௌத்த பிக்குமாரும் பொதுமக்கள் அறுவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை டச்பே கடற்கரை மற்றும் போதிராஜ விகாரை சூழலில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், புத்தர் சிலை ஒன்றை வலுக்கட்டாயமாக நிறுவ முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொல்லியல் சட்டங்கள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.